மதுரை: நெல்லை கண்ணன் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனுவில், "மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி நெல்லை மேலப்பாளையத்தில் கடந்த 2019 டிசம்பர் 29 இல் எஸ்டிபிஐ கட்சி சார்பில் மாநாடு நடைபெற்றது.
அதில் நான் பிரதமர் மோடி குறித்தும் பாஜக தலைவர் அமித்ஷா குறித்தும் அவதூறாக பேசியதாக கூறி பல இடங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்ட பேச்சு வழக்கிலேயே 'ஜோலியை முடிக்கலியா?' எனப் பேசப்பட்டது. அதாவது அரசியலில் பிரதமர் மோடி மற்றும் பாஜக தலைவர் அமித்ஷாவின் ஆட்சியை முடிவுக்கு கொண்டுவரவில்லையா? எனும் நோக்கிலேயே அவ்வாறு பேசப்பட்டதே தவிர, உயிருக்கு அச்சுறுத்தல் விளைவிக்கும் நோக்கில் அல்ல.
ஆனால் அது தவறாக புரிந்து கொள்ளப்பட்டு, என் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. ஆகவே என் மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்" எனக் கூறியுள்ளார்.
இந்த வழக்கு இன்று நீதிபதி இளங்கோவன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கின் இறுதி விசாரணையை ஆகஸ்ட் 16 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: முறை தவறிய உறவால் பெண் கொலை - முதியவர் கைது