மதுரை: தமிழ்நாடு முழுவதும் ஆங்காங்கே பெட்ரோல் வெடிகுண்டு வீச்சு சம்பவங்கள் நடைபெற்று வரும் நிலையில், தென் மண்டல ஐஜி அஸ்ரா கார்க் இன்று (செப்.25) மதுரை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
அப்போது அவர், 'திண்டுக்கல் நகர் உட்கோட்டம், தெற்கு காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட திண்டுக்கல் குடைப்பாறைப்பட்டியைச் சேர்ந்த பால்ராஜ்(43) என்பவர், குடைப்பாறைபட்டியில் உள்ள தனது PVT CONSULTING அலுவலகத்தில் வைத்து இருந்த காருக்கு அடையாளம் தெரியாத நபர்கள் நேற்று செப்.24ஆம் தேதி அதிகாலையில் தீ வைத்து எரித்துவிட்டதாக புகார் அளித்தார். அதன்பேரில், நகர தெற்கு காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து மேற்கொண்ட புலன் விசாரணையில் மேற்படி குற்றச்செயலில் ஈடுபட்ட பேகம்பூரைச் சேர்ந்த சிக்கந்தர் என்பவர் கைது செய்யப்பட்டார்.
மேலும் தென்மாவட்டங்களில் அசம்பாவிதங்கள் ஏதேனும் நிகழாமல் இருக்க, காவல்துறையினர் தொடர்ந்து தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ள பகுதிகளைப் பட்டியலிட்டு அவ்விடங்களுக்கு தகுந்தவாறு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளன. அவற்றோடு இல்லாமல், மேற்கொண்டு எவ்வித அசம்பாவிதங்களும் ஏற்படாதவாறு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முக்கியமான நபர்களை அழைத்து, அந்தந்த உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர்கள் தலைமையில் அந்தந்த பகுதிகளில் அமைதிக்கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன.
அதே சமயத்தில், டிஜிபி சைலேந்திரபாபு கூறியபடி, பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கக் கூடிய காரியங்களிலோ (அ) ஈடுபடுவோர், தூண்டுவோர் (அ) கூட்டுச்சதி செய்வோர் என யாராக இருப்பினும், அவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். மேலும், தேவைப்படும் பட்சத்தில் அம்மாதியான காரியங்களில் ஈடுபடுவோரை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்வோம்.
தென்மாவட்டங்களில் காவல்துறையினர், தொடர்ந்து பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டு வரும் நிலையில், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் யாரும் ஈடுபட வேண்டாம். அவ்வாறு மீறி ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்' எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், 'அனைத்து பெட்ரோல் பங்க் நிர்வாகிகளுக்கும் ஊழியர்களுக்கும் பாட்டில்களில் பெட்ரோல் பெற்றுச் செல்வோர் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அது குறித்த தகவல்களை பத்திரப்படுத்த பங்க் நிர்வாகிகளுக்கு வலியுறுத்தியுள்ளோம்.
மதுரையில் நேற்று பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்தில் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும், தங்களுக்கு தாங்களே விளம்பரத்திற்காக இது போன்ற சம்பவங்களை செய்திருந்தால் அது விசாரணையில் தெரிய வரும்போது, அவர்கள் மீதும் கடும் நடவடிக்கை பாயும்' என எச்சரிக்கை விடுத்தார்.
இதையும் படிங்க: பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தால் தேசிய பாதுகாப்புச்சட்டத்தின்கீழ் கைது - டிஜிபி சைலேந்திரபாபு