தமிழ்நாட்டில் தண்ணீர் தட்டுப்பாடு மிகக் கடுமையாக பொதுமக்களை பாதித்துவருகிறது. தமிழ்நாடு முழுவதும் ஆங்காங்கே குடிநீர் கேட்டு மக்களின் போராட்டம் நடைபெற்றுவருகின்றது. அரசும் பொதுமக்களுக்கு போதுமான தண்ணீரை வழங்குவதற்கான செயல்திட்டங்களுக்கு அதிக முன்னுரிமை கொடுத்து செயல்பட்டுவருகிறது.
தண்ணீர் தட்டுப்பாட்டுக்கு நீர்நிலைகள் காணாமல்போனது ஒரு காரணம் என்றாலும் முக்கியக் காரணம் வரைமுறையற்ற மணல் கொள்ளைதான் என நீரியல் வல்லுநர்கள் எச்சரிக்கை செய்கின்றனர்.
தண்ணீர் பற்றாக்குறை, மணல் கொள்ளை உள்ளிட்வை குறித்து மதுரையைச் சேர்ந்த தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் முன்னாள் தணிக்கைத் துறை அலுவலரான கே.கே.என். ராஜன் கூறியதாவது, "மணல், தண்ணீர் இவை இரண்டும் இயற்கை நமக்கு வாரி கொடுத்த அற்புதமான கொடை; ஆனால் அவற்றைக் காப்பாற்ற தவறியவர்களாக நாம் இன்று நிற்கிறோம்.
சராசரியாக 100 மீட்டர் நீளம், ஒரு மீட்டர் அகலம், ஒரு மீட்டர் ஆழம் உள்ள மணல் பரப்பில் ஏறக்குறைய 30 ஆயிரம் லிட்டர் தண்ணீர் கிடைக்கும். அதேபோன்று ஒரு லாரியில் அள்ளக்கூடிய ஒரு யூனிட் மணலில் ஆயிரம் லிட்டர் தண்ணீர் உள்ளது.
கடந்த 2014இல் இருந்து 2017 வரை ஏறக்குறைய மூன்று ஆண்டுகளில் 32.12 டிஎம்சி நிலத்தடி நீர் செறிவூட்டப்பட்டுள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
ஆனால் தினமும் எவ்வளவு நிலத்தடி நீர் உறிஞ்சப்படுகிறது, தற்போதைய இணைப்பு நிலவரம் என்ன என்பது குறித்து அரசிடம் தெளிவான புள்ளி விவரங்கள் இல்லை. அனைத்துக் குடிநீர்த் திட்டங்களும் ஆற்றுப் படுகையில் உள்ள மலைப்பாங்கான பகுதிகளில் அமைக்கப்படுகின்ற நீரை உறிஞ்சி கிணறுகள் மூலமாகத்தான் செயல்படுத்தப்பட்டுவருகின்றன.
ஆனால் அந்த மணல்பாங்கான பகுதிகளில்தான் தற்போது மணல் கொள்ளை மிக தீவிரமாக நடைபெற்றுவருகிறது. இதனால் நீர் உறிஞ்சி கிணறுகளில் போதுமான தண்ணீர் கிடைக்காத நிலை ஏற்பட்டு அந்தக் கிணறுகள் எல்லாம் மூட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் தாமிரபரணி, பெரியாறு, வைகை, பாலாறு, தென்பெண்ணை, கொசஸ்தலை போன்ற முக்கிய ஆறுகளில் திருநெல்வேலி, ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல், திருவள்ளூர், விழுப்புரம், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் அமையப்பெற்றுள்ள 55 கூட்டுக் குடிநீர்த் திட்டங்கள் இயக்கத்திலிருக்கும் 132 நீர் உறிஞ்சி கிணறுகள் அதிகப்படியாக மணல் எடுத்ததால் பாதிக்கப்பட்டுள்ளன.
எவ்வளவு மணல் எடுக்கப்பட்டது என்பது குறித்து அரசிடம் போதுமான புள்ளி விவரங்கள் இல்லை. அதேபோன்று புனரமைப்புப் பணிகள் எவ்வாறு மேற்கொள்ளப்பட்டன? அதன் மூலம் மணல் கொள்ளை கட்டுப்பாட்டுக்குள் வந்து விட்டதா என்பது குறித்தும் தகவல் இல்லை.
ஆகையால் மணல் கொள்ளை குறித்த அரசின் புள்ளி விவர நிலைமை தற்போது மழைக்காலத்திற்கு முன்பாக ஒவ்வொரு ஆறுகளிலும் மணல் இருக்கிறது, மழைக் காலத்திற்குப் பிறகு நதிகளில் வெள்ளம் வடிந்த பின்னர் எவ்வளவு மணல் இருக்கிறது என்பது குறித்து முழுமையான புள்ளிவிவரத்தை தமிழ்நாசு அரசு தயாரிக்க வேண்டும். அப்போதுதான் தற்போதைய குடிநீர் பஞ்சத்திற்கு முழுமையான தீர்வினை எட்ட முடியும்" என எச்சரிக்கை விடுத்தார்.