மணிவாசகத்தின் இறுதிச்சடங்கு சேலத்தில் நடைபெறவுள்ளது. அதில் அவர் மனைவி, சகோதரி கலந்துகொள்ள அன்பரசன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில், 'கடந்த 29ஆம் தேதி கேரளாவின் அகலி வனப்பகுதியில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் மாவோயிஸ்ட் மணிவாசகம் சுட்டுக் கொல்லப்பட்டார். இது தொடர்பாக அன்று மாலை 6.30 மணி அளவில் எனக்கு செல்ஃபோன் அழைப்பு ஒன்று வந்தது.
இறந்தவர் மணிவாசகம் தான் என்பதை உறுதி செய்ய அவரின் தூரத்து உறவினர்களைக் காவல் துறையினர் அழைத்துள்ளனர். ஆனால், அவரது மனைவியே அவரை அடையாளம் காணத் தகுதியானவர். மேலும் கேரள காவல் துறையினரால் மணிவாசகம் சித்ரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது.
இந்நிலையில் மணிவாசகத்தின் மனைவி கலா, சகோதரி சந்திரா ஆகியோர் பொய் வழக்குகளில் கைது செய்யப்பட்டு திருச்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவரது இறுதிச்சடங்கில் பங்கேற்க அனுமதிக்கக் கோரியும் அனுமதி வழங்கப்படவில்லை. ஆகவே, மனிதநேயத்தின் அடிப்படையில், மணிவாசகத்தின் உடலை அடையாளம் கண்டு உறுதி செய்யவும், அவரது இறுதிச்சடங்கில் பங்கேற்கவும் மணிவாசகத்தின் மனைவி கலா, சகோதரி சந்திரா ஆகியோருக்கு 30 நாள் பரோல் வழங்கி உத்தரவிட வேண்டும். அவரது இறப்பு தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும்' எனக் கூறியிருந்தார்.
இந்த மனு இன்று நீதிபதிகள் வைத்தியநாதன், ஆனந்த் வெங்கடேஷ் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், மணிவாசகம் உடல் சேலம் அரசு மருத்துவனைக்கு கொண்டுவரப்பட்ட நிலையில், இருவருக்கும் பரோல் வழங்க வேண்டும் எனக் கூறப்பட்டது. இதையடுத்து இருவருக்கும் மூன்று நாட்கள் பரோல் வழங்கியும், ஞாயிறு மாலை இருவரும் சிறைக்குத் திரும்ப வேண்டும் எனக் கூறியும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மேலும் படிக்க: விதிமீறி செயல்படும் மனமகிழ் மன்றங்கள்: அனுமதி ரத்து