மதுரை: திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளையைச் சேர்ந்த குமரேசன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், "திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள நம்பியார் ஆற்று படுகையில் இருக்கக்கூடிய மணல்கள் விலை உயர்ந்த மற்றும் சக்திமிக்க தாதுக்கள் மிகுந்து இருப்பதால் கடந்த 2019ஆம் ஆண்டு முதல் இந்தப் பகுதியில் மணல் எடுக்க தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த மணலில் Zircon, illuminate, monazite, sillimanat போன்ற விலையுயர்ந்த தாது மணல் உள்ளது.
இந்நிலையில் திருநெல்வேலி மாவட்ட நீதிமன்றத்தில் அரசின் குற்றவியல் வழக்கறிஞராக பணிபுரியும் ராமமூர்த்தி தனது அதிகாரத்தை பயன்படுத்தி தாது மிகுந்த மணல்களை கடத்தி பதுக்கி வைத்துள்ளார். இது சட்ட விரோதமாகும். இது குறித்த புகாரின் அடிப்படையில் திசையன்விளை காவல் துறையினர் இவர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
ஆனால் எந்த நடவடிக்கையும் இல்லை. மேலும் அவருக்கு சாதகமாக தொடர்ந்து செயல்பட்டு வருகின்றனர். இதனால் இவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திருநெல்வேலி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர், மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளிக்கப்பட்டது. இப்புகாரின் அடிப்படையில் விசாரணை செய்யப்பட்டது. சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த மணலில் விலை உயர்ந்த தாதுக்கள் உள்ளதால் இவர் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் பரிந்துரை செய்திருந்தார்.
ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இவர் அரசு வழக்கறிஞராக இருந்து கொண்டு சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வருகிறார். எனவே இந்த வழக்கை திசையன்விளை காவல் துறையினர் விசாரணை செய்தால் நேர்மையான விசாரணையாக இருக்காது, எனவே இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு அல்லது சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டும்" இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இந்த மனு இன்று (ஏப்ரல் 5) நீதிபதி இளந்திரையன் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி கனிம வளத்துறை இயக்குநர், மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர், சிபிசிஐடி மற்றும் சிபிஐ பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை இரண்டு வாரங்களுக்கு (ஏப்ரல் 24) ஒத்திவைத்தார்.
இதையும் படிங்க: மாணவர் சேர்க்கைக்கு லஞ்சம்.. கே.வி.பள்ளி முதல்வருக்கு 5 ஆண்டுகள் சிறை!