மதுரை: திருவள்ளுவரை கடவுளாகவும், திருக்குறளை புனித வேதமாகவும் ஏற்று பின்பற்றும் மதம் ’திருவள்ளுவர் மதம்’ என அழைக்கப்படுகிறது. இதை பரப்புரை செய்து உருவாக்கியவர் மூவாற்றுபுழாவைச் சேர்ந்த சிவானந்தர்.
சற்றேறக்குறைய 30 ஆயிரம் பேரை உறுப்பினராகக் கொண்ட ’பகவான் ஆதி திருவள்ளுவர் ஞான மடங்களை’ உருவாக்கிய சிவானந்தர், மருத்துவமனையில் தற்போது உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார். அவருக்காக உதவி கோரி ஞான மட உறுப்பினர்கள் வேண்டுகோள் வைத்துள்ளனர்.
அமைதி புரட்சி
கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கி, பாலக்காடு ஆகிய மாவட்டங்களில் பகவான் ஆதி திருவள்ளுவர் ஞான மடம் என்ற பெயரில் மடங்களை உருவாக்கியதால், கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக கேரளத்தில் நிகழ்ந்து வரும் அமைதிப்புரட்சியின் தலைவரே சிவானந்தர்.
சிவானந்தரின் அனைத்து முயற்சிகளுக்கும் உறுதுணையாக இருந்து திருக்குறளைப் பரப்பி வந்தவர், அவரது துணைவியார் சரஸ்வதி. அவர் கடந்த ஏப்ரல் மாதம் 17ஆம் தேதி உடல்நலக்குறைவால் காலமானார். இந்நிலையில் கடந்த சில வாரங்களாக நோய்வாய்ப்பட்டு சிவானந்தரும் கடும் அவதிக்குள்ளானார்.
சிகிச்சைக்கு உதவி
முன்னதாக கேரளத்திலுள்ள கோதமங்கலத்திலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தார். இந்நிலையில் உடல்நிலை மோசமடைந்ததால் எர்ணாகுளத்திலுள்ள மாதா அமிர்தானந்தமயி மருத்துவமனையில் தற்போது சிகிச்சைப் பெற்று வருகிறார்.
இது குறித்து பகவான் ஆதி திருவள்ளுவர் ஞான மடங்களின் தமிழ்நாடு நெறியாளர் தன்மானன், ’'திருக்குறளை வாழ்வியலாக்கிய வரலாற்றை உலகத்தில் யாரும் படைக்காத நிலையில், அதனைச் செய்து காட்டியவர் சிவானந்தர் என்ற ஒற்றை மனிதர்.
திருக்குறளை பரப்பியவருக்கு உதவிக்கரம்
இடுக்கி மாவட்டம், சேனாபதியில் 30 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட ஞானமடம் கேரளத்தின் பல்வேறு மாவட்டங்களில் மிக சிறப்பாக கிளைவிட்டதுடன், மக்களை வள்ளுவ நெறியில் வாழ்ந்து காட்டவும் தூண்டியது. ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை திங்கள் 10ஆம் நாளில் ஞான மடங்களின் ஆண்டு விழா பண்பாட்டு எழுச்சியுடன் நடைபெற்று வருகிறது.
சிறுநீரகத் தொற்று காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேல் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தபோதும்கூட தனது பரப்புரைப் பயணத்தை ஒருபோதும் சிவானந்தர் நிறுத்தவில்லை. சிவானந்தர் தற்போது எர்ணாகுளத்திலுள்ள தனியார் மருத்துவமனையில் உயிருக்குப் போராடி வருகிறார்.
வரலாற்று கடமை
திருக்குறளின் பெருமை மிகு வாழ்வியலை பரந்துபட்ட மக்கள்திரளிடம் கொண்டு சேர்த்த சிவானந்தருக்கு, உலகம் தழுவி வாழ்கின்ற தமிழர்களும் திருக்குறள் அன்பர்களும் உதவி செய்ய வேண்டியது வரலாற்றுக் கடமையாகும்' என்கிறார்.
சாதி, மதம், இனம், மொழி உள்ளிட்ட எல்லைகளைக் கடந்து சிவானந்தரின் மக்கள் பணிக்காகவும், திருக்குறள் பரப்புரைக்காகவும் இக்கட்டான நேரத்தில் உதவி செய்ய வேண்டும் என பகவான் ஆதி திருவள்ளுவர் ஞான மட பொறுப்பில் உள்ளோரும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: ‘சமூகநீதி என்பதற்கான இலக்கணம் பிரதமர் மோடியின் அரசுதான்’