மதுரை மாவட்டம் சத்திரப்பட்டி அருகேயுள்ள கடவூரில் அமைந்திருக்கும் மாயா கிராமத்தில், இந்தியா, சர்வதேச அளவில் சமூக மேம்பாடு, கலை வளர்ச்சிக்காகப் பணியாற்றும் பல்வேறு நபர்களுக்கு மாயா கோனே 2019 விருது இன்று வழங்கப்பட்டது. இந்த விழாவில் மத்தியப் பிரதேச அரசின் முன்னாள் தலைமைச் செயலாளர் சரத் சந்திர பெஹார், விடுதலைப் போராட்ட வீரர் சர்தார் வேதரத்தினத்தின் பேரன் வேதரத்தினம், நடிகரும் நாடகக் கலைஞருமான சண்முகராஜன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.
இந்த விழாவில் மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த சமூக சேவகர்கள் பிரதிபா ஷிண்டே, விஜய் பாகேகர், பாரம்பரிய கலைஞர்கள் கேரள மாநிலம் வயநாட்டைச் சேர்ந்த பினு தாத்துபுரா, புதுடெல்லியைச் சேர்ந்த விநாயக்ராம், சர்வதேச அமைதிக்கான விருது நேபாள நாட்டைச் சேர்ந்த பத்திரிகையாளர் சந்திர கிஷோர் ஆகியோருக்கு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டன.
இந்த விருதைப் பெற்றுக் கொண்ட சந்திர கிஷோர் பேசுகையில், 'சுதந்திரம் கிடைத்ததைப் போன்ற ஒரு தோற்றமிருந்தாலும் உண்மை நிலை அவ்வாறில்லை. ஏதோ ஒரு வகையில் நமது உரிமைகளை நாம் இழந்து கொண்டிருக்கிறோம். காந்தியத்தின் கொள்கைகள் குறித்து பேசுவோர் உள்ளொன்று வைத்து புறமொன்று செய்வதையும் காண்கிறோம். பெற்ற சுதந்திரத்தைப் பேணிக் காப்பது தற்போதுள்ள முக்கியக் கடமைகளில் ஒன்றாகும்.
இந்திய விடுதலைப் போராட்டத்தில் நேபாளியர்களின் பங்கும் அதிகம். அவ்வகையில் காந்திய வழியைப் பின்பற்றி நேபாளத்தில் நடைபெற்று வரும் சத்தியாகிரக போராட்டங்கள், அந்நாட்டின் மறுமலர்ச்சிக்கு வித்திடும். இந்திய-நேபாள உறவு என்றென்றும் சிறந்து விளங்குவதற்கான எனது பங்களிப்பை எப்போதும் வழங்குவேன்' என்றார். அதன் பின்னர் ஏக்தா பரிசத் அமைப்பின் நிறுவனர் ஒ.பி.ராஜகோபால் இந்த விருதின் முக்கியத்துவம் குறித்து பார்வையாளர்களிடம் பகிர்ந்து கொண்டார்.