மதுரை ஜம்மு-காஷ்மீரில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலில் வீர மரணம் அடைந்த ராணுவ வீரர் லட்சுமணனின் உடல், மாவட்டம் திருமங்கலம் அருகே தும்மக்குண்டு-புதுப்பட்டி கிராமத்தில், ராணுவ மரியாதையுடன் 21 குண்டுகள் முழங்க இன்று (ஆக.13) நல்லடக்கம் செய்யப்பட்டது.
தர்மராஜ்-ஆண்டாள் தம்பதியரின் இரட்டை மகன்களில் ஒருவரான லட்சுமணன்(24), ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ரஜவுரி பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது, கடந்த ஆக.11ஆம் தேதி தீவிரவாதிகளின் தாக்குதலில் வீர மரணமடைந்தார்.
இந்நிலையில் இன்று அவரது உடல் விமானம் மூலம் மதுரை விமான நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டு, அங்கு அவரது உடலுக்கு ராணுவ மரியாதை அளிக்கப்பட்டது. பிறகு அவரது சொந்த ஊரான புதுப்பட்டிக்கு கொண்டுவரப்பட்டு லட்சுமணனின் உடல் அவர்களுக்கு சொந்தமான இடத்திலேயே 21 துப்பாக்கி குண்டுகள் முழங்க நல்லடக்கம் செய்யப்பட்டது.
தமிழக அரசின் சார்பில் நிதி அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், தொழில்துறை அமைச்சர் தங்கம்தென்னரசு ஆகியோர் மரியாதை செலுத்தினர். தமிழக அரசு அறிவித்த நிதி உதவி ரூ.20 லட்சத்திற்கான காசோலையை அமைச்சர்கள் வீர மரணமடைந்த லட்சுமணன் குடும்பத்திற்கு வழங்கி ஆறுதல் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: மதுரை வந்த ராணுவ வீரரின் உடல் ...அமைச்சர், மாவட்ட ஆட்சியர் அஞ்சலி