ஜல்லிக்கட்டுப் போட்டிகளைப் பாதுகாப்பாக நடத்த எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய மாவட்ட ஆட்சியருக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரையைச் சேர்ந்த திருப்பதி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "ஜல்லிகட்டு நிகழ்வில் மாடுகளை பதிவு செய்யும் இடம், மருத்துவப் பரிசோதனை செய்யும் இடம், வாடிவாசல், வாடிவாசலை கடந்து வரும் காளைகளை பிடிக்கும் இடம் ஆகியவை முக்கியமானவை.
ஜல்லிக்கட்டில் பங்கேற்க வாடி வாசலுக்குப் பின்புறம் 100க்கும் மேற்பட்ட காளைகளுடன் அதன் உரிமையாளர்கள் அடையாள வில்லை (டோக்கன்), மருத்துவச் சான்றிதழ் ஆகியவற்றைப் பெற்று நீண்ட வரிசையில் காத்திருப்பர். இதற்கிடையில் அடையாள வில்லை வாங்காமலும், உரிய மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளாமலும் சில காளைகள் அனுப்பப்படுகின்றன.
'ஜல்லிக்கட்டு காளை வளர்க்கும் வீரத் திருநங்கை நான்' - பெருமையுடன் பூரிக்கும் சிந்தாமணி
இதனால் ஜல்லிகட்டு நடைபெறும் முதல் நாளே வெளியூர்களிலிருந்து வந்து, அடையாள வில்லையுடன் மருத்துவப் பரிசோதனைச் சான்றிதழ் பெற்று காத்திருக்கும் வரிசையில் இடையூறு ஏற்படுவதால் தள்ளுமுள்ளு ஏற்படுகிறது. இதில் காளைளுக்கும், உரிமையாளர்களுக்கும் காயம் ஏற்படுகிறது.
இதனை முறைப்படுத்தக் கோரி 2019ஆம் ஆண்டு தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் உத்தரவிட்டதன் அடிப்படையில், அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டுக்கு முறையாக அடையாள வில்லைகள் வழங்கப்பட்டு, தனிக்குழுவால் ஒழுங்குபடுத்தி நடத்தப்பட்டது. ஆனால், பாலமேடு, அலங்காநல்லூர் பகுதிகளில் அவ்வாறு நடத்தப்படவில்லை.
ஜல்லிக்கட்டு தடைக்கு காரணம் இரண்டு தமிழர்கள் - மறைக்கப்பட்ட உண்மையைக் கூறும் 'மெரினா புரட்சி'
ஆகவே, மதுரை மாவட்டம் முழுவதும் ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகளுக்கான பரிசோதனையும், வாடிவாசலுக்கு முன்பாக காளைகள், பயிற்சியாளர்கள், உரிமையாளர்கள் ஆகியோரின் பாதுகாப்பையும் உறுதி செய்யும் வகையில் குழு அமைத்து காளைகளை ஒழுங்குபடுத்த உத்தரவிட வேண்டும்" எனக் கோரியிருந்தார்.
இவ்வழக்கு நீதிபதிகள் துரைசுவாமி, ரவீந்திரன் அமர்வு முன்பாக வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத்தரப்பில் ஜல்லிக்கட்டுப் போட்டிகளைப் பாதுகாப்பாக நடத்த உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டது. அதற்கு மனுதாரர் தரப்பில், 2019ஆம் ஆண்டு நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி தலைமையில் அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு சிறப்பாக நடத்தப்பட்டது. அது போல இந்த ஆண்டும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்" எனக் கோரப்பட்டது.
ஜல்லிக்கட்டு விழாக்குழுவில் ஆதி திராவிடர்களைச் சேர்க்கக் கோரிய மனு - மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க ஆணை
இதையடுத்து நீதிபதிகள் மதுரை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டிகளைப் பாதுகாப்பாக நடத்த எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய மதுரை மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டு வழக்கை 10ஆம் தேதி ஒத்திவைத்தனர்.