மதுரை: மதுரை மாநகருக்குள் ஓடும் வைகையாற்றின் நடுவே ஆழ்வார்புரம் - ஓபுளாபடித்துறை மற்றும் கல்பாலம் அருகே இரண்டு தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளன. மேலும், ஆரப்பாளையம் நீரேற்று நிலையம் அருகே மேலும் ஒரு தடுப்பணை கட்டப்பட்டு வருகிறது. இந்தத் தடுப்பணைப் பணிகளுக்கான மணல் தேவைக்கு வைகை ஆற்றில் இருந்தே மணல் சுரண்டப்பட்டு கட்டப்பட்டு வருவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அது தொடர்பான வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சுருங்கிவிட்ட வைகை: இதுகுறித்து வைகை நதி மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளரும், சுற்றுச்சூழல் ஆர்வலருமான ராஜன் கூறுகையில், "சீர்மிகு நகர திட்டத்தின்கீழ் வைகையாற்றை எந்த அளவுக்குச் சுருக்க முடியுமோ அந்த அளவிற்கு சுருக்கிவிட்டார்கள். வைகையாற்றின் இரண்டு கரைகளிலும் சாலைப் பணி அமைத்து, ஆற்றின் நீரோட்டத்திற்கு தடை ஏற்படுத்தி வைத்துள்ளனர்.
மேலும், ஓபுளாபடித்துறை மற்றும் கல்பாலம் அருகே தடுப்பணை கட்டும்போதே மிகக் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்தோம். அதனையும் மீறி தற்போது அங்கே தடுப்பணை கட்டியுள்ளனர். தற்போது ஆரப்பாளையம் அருகே வைகையாற்றில் கட்டப்பட்டு வரும் தடுப்பணைக்கான மணல் தேவைக்காக, ஆற்றிலிருந்தே மண்ணைச் சுரண்டுகிறார்கள்.
இயல்புக்கு மாறான செயல்: இதனால் நிலத்தடி நீர் மட்டம் பாதிப்புக்கு ஆளாகாதா?. மேலும் வைகையாற்றின் இயல்புக்கு மாறாக இச்செயல் அமையாதா?. இதுபோன்ற சுரண்டலை மதுரை மாநகராட்சி உடனடியாக நிறுத்த வேண்டும். இல்லாவிட்டால், மக்களைத் திரட்டி போராட்டத்தில் ஈடுபட வேண்டிய நிலை ஏற்படும்" என்றார்.
இதையும் படிங்க: குழந்தை படைப்பாளிகள் எங்கே? - உருவாக்க மறந்ததா அல்ல ஊக்குவிக்க மறந்ததா இந்த சமூகம்?