கன்னியாகுமரி மாவட்டம் திருவிதாங்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் அன்வர் ஹுசைன். இவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் முன்ஜாமின் கோரி மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
அதில், "கடந்த டிசம்பர் 28ஆம் தேதி, மத்திய அரசு கொண்டுவதுள்ள சிஏஏ சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், திருவிதாங்கோடு பகுதியில் அனுமதி பெறாத கூட்டம் நடத்தப்பட்டது.
அப்போது பிரதமரை அவதூறாக பேசியதாக காவல் நிலையத்தில் கடந்த ஜனவரி 24ஆம் தேதி வழக்கு பதியப்பட்டது.
சிலரின் தூண்டுதலின் பெயரில் கூட்டம் நடத்தப்பட்ட 28 நாள்களுக்கு பின் வழக்கு பதியப்பட்டுள்ளது. காவல் நிலையத்தில் பதியப்பட்டுள்ள வழக்கில் முன்ஜாமீன் கோரி நாகர்கோவில் செஷன்ஸ் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
ஆனால், அந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து, எனது மகள் திருமணத்தை கருத்தில் கொண்டு எனக்கு முன்ஜாமின் வழங்கவேண்டும்" என்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஜி. ஆர். சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, "பேச்சுரிமை என்பது அனைவருக்கும் பொதுவானது.
அதை வன்முறையை தூண்டும் விதத்தில் பயன்படுத்தக் கூடாது. நீதிமன்றத்தின் தீர்ப்பும் கருத்துக்களும் விமர்சனத்திற்கு உட்பட்டதுதான். ஆனாலும் அதற்கும் ஒரு வரைமுறை உண்டு" என்றார்.
மேலும், குற்றஞ்சாட்டப்பட்டவர் இதேபோல வன்முறை தூண்டும் விதத்தில் மீண்டும் பேசமாட்டேன் என்று நீதிமன்றத்தில் உறுதியளித்ததை தொடர்ந்து அவருக்கு முன்ஜாமின் அளித்து நீதிபதி உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: விஜய பாஸ்கர் வருமான வரி வழக்கு: இடைக்காலத் தடை விதித்து உத்தரவு