விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் சாத்தூரைச் சேர்ந்தவர் லட்சுமணன். இவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே சூரன்குடி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தை ஒட்டி வைப்பாறு செல்கிறது. இந்த ஆற்றின் கரையோரம் உள்ள தனியார் நிலத்தில் மண் அள்ள உரிமம் பெற்று, வைப்பாற்றில் மணல் கொள்ளை அடிக்கப்படுகிறது.
இந்த சட்டவிரோத மணல் கொள்ளைக்காக மண் அள்ளும் இயந்திரம் உள்ளிட்ட கனரக இயந்திரங்கள் அங்கு நிறுத்தப்பட்டுள்ளன. தற்போது வரை மண் அள்ளும் இயந்திரங்கள் அங்குதான் உள்ளன. சூரன்கோட்டை கிராமத்தில், வைப்பாற்றில் நடைபெறும் சட்டவிரோத மணல் கொள்ளையை தடுக்க உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என மனுவில் கோரியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது இது குறித்து விருதுநகர் மாவட்ட ஆட்சியர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை 3 வாரம் ஒத்திவைத்தனர்.
இதையும் படிங்க: உயர் நீதிமன்றம் அருகே செயல்படும் மதுபானக் கடையை இடம் மாற்ற உத்தரவு