பழனி கணக்கன்பட்டியைச் சேர்ந்த வழக்கறிஞர் ராமசாமி என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில், “வரும் பிப்ரவரி மூன்றாம் தேதியன்று பேரறிஞர் அண்ணாவின் நினைவுநாள் அனுசரிக்கப்படவுள்ளது. இதனையொட்டி பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் சிறப்பு வழிபாடும் பொது விருந்தும் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்தச் செய்தி அதிர்ச்சியை அளிக்கிறது. தனி மனிதனுக்கு நினைவேந்தல் சிறப்பு வழிபாடு என்பது கடவுள் நம்பிக்கை கொண்டவர்களின் ஆன்மிக நம்பிக்கைக்கும் ஆகம விதிகளுக்கும் எதிரானது. மேலும் தனது கடைசி வாழ்நாள் வரை கடவுள் எதிர்ப்புக் கொள்கையைக் கடைப்பிடித்து வந்தவர் அண்ணா. அவருடைய நினைவுநாளில் சிறப்பு வழிபாடு என்பது கடவுள் நம்பிக்கை கொண்டவர்களையும் எத்தனையோ விரதங்களிருந்தும் பல கிலோமீட்டர் தூரம் நடை பயணமாக வந்து, பழனி தண்டாயுதபாணியை தரிசிக்க வரும் பல கோடி பக்தர்களின் மனதை புண்படுத்துவதாக உள்ளது.
அண்ணா அரசியல் கட்சியின் தலைவராக இருந்தவர். அவருக்காகச் சிறப்பு வழிபாடு செய்வது என்று தொடங்கினால், இறந்துபோன பல்வேறு கட்சித் தலைவர்களுக்கும் இதுபோன்ற சிறப்பு வழிபாடு செய்ய வேண்டும் என்று கோரிக்கைகள் எழும். அவ்வாறு தொடங்கினால் வருடத்தில் பாதி நாள்கள் சிறப்பு வழிபாடு, நினைவு வழிபாடு போன்றவை நடத்துவதற்கே நேரம் இருக்காது.
எனவே இதுபோன்ற அரசியல் தலைவர்களின் நினைவேந்தலுக்கும் அண்ணா நினைவுநாள் சிறப்பு வழிபாடுக்கும் தடை விதிக்க வேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் துரைசாமி, ரவீந்திரன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில், இதுபோன்ற காலங்களில் சிறப்பு வழிபாடு, அன்னதானம் வழங்கலாம் என அரசாணை உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து நீதிபதிகள், அந்த அரசாணையை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை வரும் பிப்ரவரி மூன்றாம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.