மதுரை: விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த லட்சுமி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுவினைத் தாக்கல்செய்திருந்தார். அதில், "ராஜேந்திர பாலாஜியின் சகோதரி நான். ராஜேந்திர பாலாஜியின் உறவினர் என்பதற்காக என்னையும், எனது மகன்கள், ஓட்டுநரையும் விசாரணை என்ற பெயரில் துன்புறுத்தக் கூடாது எனக் காவல் துறைக்கு உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார்.
இந்த வழக்கு இன்று நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கறிஞர் மாரீஸ்குமாரின் வீடுகளில் கடந்த டிசம்பர் 29ஆம் தேதி எவ்வித அனுமதியுமின்றி காவல் துறையினர் சோதனையில் ஈடுபட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
சோதனைக்கு அனுமதி தந்தது யார்? - நீதிபதி
அதற்கு நீதிபதி, இது ஏற்கத்தக்கதல்ல எனக் குறிப்பிட்டார். தொடர்ந்து சோதனையில் ஈடுபட்ட காவல் துறையினரை அழைத்து, வழக்கறிஞர் மாரீஸ்குமாரின் வீட்டில் சோதனை செய்யப்பட்டதை உறுதிசெய்தார். யாருடைய அறிவுறுத்தலின்பேரில், வீட்டில் சோதனை செய்தீர்கள்? எனக் கேள்வி எழுப்பினார்.
அதற்கு மதுரை காவல்துறை கண்காணிப்பாளர் அறிவுறுத்தலின் பேரில், வழக்கறிஞரின் வீட்டில் சோதனை செய்யப்பட்டது எனத் தெரிவிக்கப்பட்டது. அவற்றைப் பதிவு செய்துகொண்ட நீதிபதி, மாரீஸ்குமாரின் வீட்டில் சோதனை செய்த நாளன்று நடந்தவற்றைப் பதில் மனுவாகத் தாக்கல்செய்ய உத்தரவிட்டார்.
இதனைத் தொடர்ந்து, மதுரை நகர்ப் பகுதியில் வசிக்கும் மாரீஸ்குமாரின் வீட்டில் சோதனை செய்தது எப்படி? என்பது குறித்து மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பதில் மனு தாக்கல்செய்ய உத்தரவிட்டு வழக்கை ஜனவரி 7ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
இதையும் படிங்க:'ஃபிளக்சிபில் அண்ட் டைனமிக் முதலமைச்சர்... ஸ்டாலினைப் பாராட்டிய ஆளுநர்!'