மே மாதம் 20ஆம் தேதி தனியார் தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் முடிதிருத்தும் கடைகளைத் திறக்க அனுமதிக்க வேண்டும் எனக்கோரி மதுரை மத்திய தொகுதி திமுக சட்டப்பேரவை உறுப்பினர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் பேசினார். அதில் அக்குறிப்பிட்ட சமூகம் குறித்து பழனிவேல் தியாகராஜன் கூறிய கருத்தால், அவரிடம் அச்சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் மன்னிப்பு கேட்க கோரியிருந்தனர்.
அதனைத் தொடர்ந்து இன்று அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “கரோனா காலத்தில் மத்திய, மாநில அரசுகளின் அலட்சியமான செயல்பாடுகளையும் முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகளில் இருக்கும் சுணக்கத்தையும், தனியார் தொலைக்காட்சி ஒன்றின் விவாதத்தில் விமர்சித்தேன்.
அப்போது முடிதிருத்தும் கடைகளில் கூட இந்த அரசுக்கு சரியான திட்டமிடுதல் இல்லை என்பதைச் சுட்டிக்காட்டி, மதுக்கடைகளைத் திறக்க மாநிலங்களே முடிவெடுக்கலாம் என உத்தரவிடும் மத்திய அரசு, முடிதிருத்தும் கடைகளைத் திறக்க மட்டும் ஏன் அனுமதிக்கவில்லை என்று கேள்வியெழுப்பினேன்.
அச்சமயம் குறிப்பிட்ட சமுதாயத்தின் பெயரைத் தவறுதலாக உச்சரித்து விட்டேன். இது எனது பேச்சினூடாக வந்துவிட்டது. அதற்காக எனது வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தொடக்கக் காலம் முதல் திராவிட இயக்கத்தின் விளைநிலமாக இருந்தவை முடிதிருத்தும் நிலையங்கள். திராவிட இயக்க இதழ்கள் அனைத்தையும் வாங்கிவைத்து பகுத்தறிவு, இன உணர்வு, மொழிப்பற்று ஆகியவற்றின் பரப்புரை மையங்களாக இருந்தன அவை.
தலை முடி திருத்தும் கடைகள் மட்டுமல்ல, முடி எனப்படும் மன்னனைத் திருத்தும் கடைகளாகச் செயல்பட்டன. திராவிட இயக்கத்தில் நான்காவது தலைமுறையாகச் செயல்பட்டு வரும் நான், இத்தகைய வரலாற்றை அறிந்தவன் என்றாலும் தவறுதலாக அச்சொல்லைப் பயன்படுத்தியமைக்காக மீண்டும் ஒரு முறை எனது வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டிருந்தார்.