கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியைச் சேர்ந்த மணி என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.
அம்மனுவில், “கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தாலுக்காவில் இருந்து புகலூர் தாலுக்காவிற்கு நிலத்தடி நீரை குழாய் மூலம் கொண்டு செல்ல கரூர் மாவட்ட ஆட்சியர் கடந்த நவம்பர் 18ஆம் தேதி தனி நபருக்கு அனுமதி அளித்தார். அரவக்குறிச்சி தாலுக்காவில் இருந்து புகழூர் தாலுக்காவிற்கு கொண்டு செல்ல சுமார் 16 கிலோ மீட்டர் தூரம் பைப் லைன் அமைப்பதால், இப்பகுதியில் நிலத்தடி நீர் வெகுவாக குறையும் அபாயம் உள்ளது. அத்துடன், விவசாய பணிகளையும் பாதிக்கும். குழாய்கள் பதிக்க சாலைகள் தோண்டப்படுவதால், அவை பழுதடைந்து உள்ளன. எனவே, அரவக்குறிச்சியில் இருந்து புகலூருக்கு தனியார் நிலத்தில் இருந்து நிலத்தடி நீரை கொண்டு செல்ல கரூர் மாவட்ட ஆட்சியர் அளித்த அனுமதியை ரத்து செய்ய வேண்டும்” என கோரியிருந்தார்.
இந்த மனுவானது, நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக விசாரிக்கப்பட்டு வந்தது. அப்போது, குழாய் பதிக்க இடைக்கால தடை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இந்நிலையில், நீதிமன்றத்தில் இடைக்கால தடையை மீறி குழாய் பதிக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்றுவந்ததாக அறியமுடிகிறது. இதனையடுத்து, நீதிமன்ற உத்தரவை மீறி செயல்படும் மாவட்ட நிர்வாகத்தினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென மனுதாரர் மணி தரப்பில் இன்று (டிச.23) நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது.
அதனை ஆராய்ந்த நீதிபதிகள், நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில் குழாய் பதிக்க மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் எவ்வாறு அனுமதிக்கிறது ? என்று கேள்வி எழுப்பினர். அத்துடன், இது குறித்து கரூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர் ஒரு மணி நேரத்தில் காணொளி வாயிலாக விசாரணைக்கு ஆஜராகி பதில் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.
பின்னர், மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தபோது, மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர் தொடர்ந்து பதிலளிக்க மறுத்து, காணொளி சந்திப்பிற்கு ஆஜராகவில்லை.
இதனால் கோபம் அடைந்த நீதிபதிகள், நீதிமன்ற உத்தரவை மதிக்காத மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நீதிமன்றத்திற்கு அதிகாரம் உள்ளது. இருப்பினும், அதனை நாங்கள் விரும்பவில்லை. எனவே, நீதிமன்ற உத்தரவை மதிக்காத மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும். வழக்கில் அடுத்த விசாரணையின்போது மாவட்ட ஆட்சியர், காவல்துறை கண்காணிப்பாளர் ஆகிய இருவரும் நேரடியாக ஆஜராக வேண்டும். அதேபோல, நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவை மீறி, அதிகார பலத்தால் எதிர்மனுதாரர் சாலைகள் நடுவோ அமைத்த குழாயை உடனடியாக அகற்றிட வேண்டும்” என உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை ஜனவரி 4 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
இதையும் படிங்க : சட்டத் துறைக்கு ஏன் நோபல் பரிசு வழங்கப்படுவதில்லை என நாம் சிந்திக்க வேண்டும் - நீதிபதி ஏ.பி.சாஹி