திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையைச் சேர்ந்த ஸ்ரீநித்யா என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அதில், "நான் 40% (locomotor disability) எனும் செயல்திறன் குறைபாடு உள்ள மாற்றுத்திறனாளி. அதற்கான அரசின் அடையாள அட்டையும் பெற்றுள்ளேன்.
தற்போது சட்டப்படிப்பில் பட்டமும் பெற்றுள்ளேன். சிறுவயது முதலே உரிமையியல் நீதிபதி ஆக வேண்டும் என்ற கனவோடு சட்டப்படிப்பை முடித்தேன். உரிமையியல் நீதிபதிக்கான தேர்வினை எழுத 40 வயது அதிகபட்ச வயது வரம்பாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
மாற்றுத்திறனாளிகளுக்கு என எவ்விதமான வயது, அனுபவ தளர்வு வழங்கப்படவில்லை. மாற்றுத்திறனாளியாக நான் முறையான அனுபவங்களைப் பெற்று, உரிமையியல் நீதிபதிக்கான தேர்வு எழுத முயற்சி செய்கையில் வயது வரம்பு கடந்து விடும்.
தேர்வினை எழுதும் வாய்ப்பை இழந்துவிடுவேன். மாற்றுத்திறனாளிகள் ஏற்கனவே சமூகத்தில் மிகுந்த சிரமங்களை எதிர்கொண்டு வரும் சூழலில் இதுபோன்ற கனவுகளோடு பயணிப்பவர்களுக்கு உதவும் வகையில், உரிமையியல் நீதிபதிக்கான தேர்வினை எழுத வயது தளர்வுகளை வழங்குவது உதவியாக இருக்கும்.
எனவே இனிவரும் காலங்களில் உரிமையியல் நீதிபதிக்கான தேர்வுகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு வயது, அனுபவ தளர்வுகளை வழங்க உத்தரவிட வேண்டும்" என குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சிவஞானம், ஆனந்தி இருவரும், 'இதுதொடர்பாக ஏற்கனவே பாக்கியராஜ் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்துள்ளார். அதனடிப்படையில் தலைமை நீதிபதியின் கீழ் 5 நீதிபதிகள் கொண்ட குழு ஆலோசனை நடத்தி வருகிறது.
எனவே விரைவாக உரிமையியல் நீதிபதிக்கான தேர்வில் மாற்றுத்திறனாளிகளுக்கான தளர்வுகள் குறித்து அறிவிப்புகள் வெளியாகும் என்று கூறி வழக்கை முடித்து வைத்தனர்.