மதுரையை சேர்ந்த ஜான்மார்டின் என்பவர் உயர் நீதிமன்றம் மதுரை கிளையில் (இன்று.9) மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், மோட்டார் வாகன சட்டத்தில், ஓட்டுநர் பயிற்சி பள்ளியில் பயிற்சி பெற்றாலே ஓட்டுநர் உரிமம் பெறலாம் என்னும் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது. அந்தத் திருத்தச் சட்டம் ஜூலை 1 முதல் அமலுக்கு வந்துள்ளது.
இந்தப் புதிய விதியின்படி, அரசு அங்கீகாரம் பெற்ற ஓட்டுநர் பயிற்சி பள்ளிகளில் பயிற்சி பெற்றவர்கள், உரிமம் பெறுவதற்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில், வாகனங்களை ஓட்டி காட்ட தேவையில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் அங்கீகாரம் பெற்ற பயிற்சி பள்ளிகள் 2 ஏக்கர் பரப்பளவில் அமைந்திருக்க வேண்டும். பயிற்சி எடுப்பதற்கான போதிய கட்டமைப்பு வசதிகளைக் கொண்டிருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், இந்தியா முழுவதும் உள்ள 4,187 ஓட்டுநர் பயிற்சி பள்ளிகள் பாதிக்கப்படும். அதில், தமிழ்நாட்டில் உள்ள 1,650 ஓட்டுநர் பயிற்சி பள்ளிகளின் உரிமையாளர்கள், பணியாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். நகரப் பகுதிகளில் 2 ஏக்கர் நிலம் என்பது வாய்ப்பில்லாத ஒன்று.
நகரத்திலிருந்து, 25 கி.மீ. தொலைவில்தான் இதுபோல பயிற்சி பள்ளியை அமைக்க முடியும். எனவே, மோட்டார் வாகன திருத்தத்திற்கு தடை விதிக்க வேண்டும்" எனக் குறிப்பிட்டிருந்தார். இந்த மனு மீதான விசாரணையில், நீதிபதிகள் சிவஞானம், ஆனந்தி இருவரும், வழக்கு குறித்து ஒன்றிய அரசும், மாநில அரசும் விரிவான பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர்.
இதையும் படிங்க: ஓட்டுநர் பயிற்சி பள்ளி அங்கீகாரம் தொடர்பான வழக்கு ஒத்திவைப்பு