ஈரோடு: சத்தியமங்கலம் நகராட்சியில் 27 வார்டுகள் உள்ளன. அதில் சுமார் 50 ஆயிரம் மக்கள்தொகை கொண்ட பகுதியில் 3 மேல்நிலைத் தொட்டிகள் அமைக்கப்பட்டு தினந்தோறும் காலை நேரங்களில் குடிநீர் விநியோகிக்கப்படுகிறது.
இந்நிலையில் வடக்குப்பேட்டை குடியிருப்புப்பகுதியில் விநியோகிக்கப்படும் குடிநீரில் சாக்கடை நீர் கலந்து வருவதாக மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
சாக்கடை நீர் கலந்த குடிநீரில் துர்நாற்றம் வீசுவதால் நீரைப் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும், அண்மையில் பாதாளச்சாக்கடை தோண்டும் போது குடிநீர் விநியோகிக்கப்படும் குழாயில் உடைப்பு ஏற்பட்டதை சரி செய்யாததால் பிரதான குடிநீர் குழாயில் சாக்கடை கலந்துள்ளதாகவும் மக்கள் தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து, கடந்த சில நாள்களாக குடிநீர் குழாயில் சாக்கடை கலந்து வருவதால் நகராட்சி நிர்வாகம் இது குறித்து நடவடிக்கை எடுத்து சுகாதாரமான குடிநீரை விநியோகிக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து நகராட்சி அலுவலர்களிடம் கேட்டபோது ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.
இதையும் படிங்க:பிரதமர் நரேந்திர மோடி மாபெரும் ஜனநாயகத் தலைவர்- அமித் ஷா