சத்தியமங்கலம் கடைவீதி வழியாகச் செல்லும் மைசூர் டிரங்க் சாலையில் வாகனப்போக்குவரத்து அதிகமாக உள்ளதால் அப்பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது வழக்கம். இந்நிலையில் கடைவீதியில் உள்ள சாலையின் இருபுறம் வாகனங்கள் நிறுத்தப்படுவதால் பேருந்து உள்ளிட்ட வாகனங்கள் செல்வதில் மிகுந்த சிரமம் ஏற்பட்டு வருகிறது. இதனால் கடைவீதியில் உள்ள சாலையின் இருபுறமும் வாகனங்களை நிறுத்தக்கூடாது எனப் போக்குவரத்து காவல்துறையினர் ”நோ பார்க்கிங்” அறிவிப்புப் பலகை வைத்தும் பயனளிக்கவில்லை.
இந்நிலையில், தற்போது நோ பார்க்கிங் பகுதியில் நிறுத்தப்படும் வாகனங்களுக்கு பூட்டிட்டு அபராதக் கட்டணம் விதித்து வசூலித்து வருகின்றனர். நோ பார்க்கிங்கில் நிறுத்தப்படும் வாகனத்தின் சக்கரத்தில் பூட்டை பொருத்திவிட்டு, பின்னர் வாகனத்தின் கண்ணாடியில் அதற்கான காரணமும், போக்குவரத்து காவல்துறையின் தொடர்பு எண்ணும் குறிப்பிடப்பட்ட துண்டு சீட்டை ஒட்டுகின்றனர். வாகன உரிமையாளரிடம் அபராதக்கட்டணம் வசூலித்தபின் வாகனத்தை விடுவிக்கின்றனர். இத்திட்டத்தால் நோ பார்க்கிங்கில் வாகனம் நிறுத்துவது குறையும் எனப் போக்குவரத்து காவல்துறை நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.