ஈரோடு மாவட்டம், கருங்கல்பாளையம் கேஏஎஸ் நகர் 1ஆவது வீதியைச் சேர்ந்தவர் சஞ்சய் முக்தா. இவர், இதே பகுதியில் கடந்த 15 வருடங்களாக டெக்ஸ்டைல்ஸ் கடை நடத்தி வருகிறார்.
வழக்கம்போல் இன்று (ஜூலை.9) கடை ஊழியர்களான இரண்டு பெண்கள் மதியம் உணவுக்காக வீட்டுக்குச் சென்று விட்டனர். அப்போது, அந்த டெக்ஸ்டைல்ஸ் கடையில் இருந்து புகை வருவதாக அக்கம் பக்கத்தினர் தீயணைப்பு நிலையத்திற்குத் தகவல் கொடுத்தனர். தீயணைப்பு நிலைய வீரர்கள் அங்கு வந்து பார்க்கும் போது, கடை உரிமையாளர் சஞ்சய் முக்தா உடலில் தீ வைத்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து உடலை கைப்பற்றிய கருங்கல்பாளையம் காவல்துறையினர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஊரடங்கு உத்தரவால், தொழில்கள் நலிவடைந்த நிலையில் தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக இறந்தாரா அல்லது வேறு ஏதாவது காரணமா என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.