ஈரோடு: கோபிசெட்டிபாளையம் அருகே கலிங்கியம் அங்கன்வாடி மையத்தில் நடந்த சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியில் கலிங்கியம், அவ்வையார்பாளையம், காந்திநகர், வெள்ளாங்காட்டுபாளையம், கணபதிபாளையம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 50 கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு நடத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் அங்கன்வாடி பணியாளர்கள், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர்கள் ஒவ்வொரு கர்ப்பிணிகளுக்கும் சந்தனம் பூசி, பூ வைத்து கைகளில் வளையலை போட்டு சிறப்பித்தனர். அப்போது அவ்வையார்பாளையத்தை சேர்ந்த காளீஸ்வரன் என்பவரது மனைவி சூர்யபிரபா என்ற கர்ப்பணி கண்ணீர் விட்டு அழுதுள்ளார்.
இதுகுறித்து விசாரித்த போது, சூர்யபிரபாவிற்கு அவருடைய மாமியார் காளியம்மாள் வளைகாப்பு ஏற்பாடு செய்த நிலையில் இரண்டு மாதம் முன்பு இறந்திருக்கிறார். அவர் இறந்து விட்டதால், வளைகாப்பு நடத்தாமல் விட்டு விட்டதாகவும், தற்போது அரசு சார்பில் வளைகாப்பு நடத்தியதாலும், நிகழ்ச்சியில் மாமியார் இல்லாததால் கண் கலங்கியதாக தெரிவித்துள்ளார். வழக்கமாக அரசு சார்பில் நடைபெறும் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியில், கர்ப்பிணி பெண்கள் வரிசையாக அமர வைத்து வளைகாப்பு நடத்துவது வழக்கம்.
சூர்யபிரபா என்ற கர்ப்பிணி பெண் அழுததை தொடர்ந்து ஒவ்வொரு கர்ப்பிணி பெண்ணிற்கும் தனித்தனியாக நலுங்கு வைத்து வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
இதையும் படிங்க: ஓடும் ரயிலில் திடீர் உடல்நலக்குறைவு..கடலூரில் சிகிச்சையில் அமைச்சர் மெய்யநாதன்..