ஈரோடு மாவட்டம் புளியம்கோம்பை பகுதியில் கடந்த சில நாள்களுக்கு முன்பு 50க்கும் மேற்பட்ட விவசாயக் கூலித்தொழிலாளர்கள் மர்ம நோயால் பாதிக்கப்பட்டு நடக்கமுடியாமல் அவதிப்பட்டனர். இந்த நோயின் தாக்கம் கம்பத்தராயன் புதூர், புளியங்கோம்பை ஆகிய பகுதிகளிலும் பரவியது. இது குறித்து நகராட்சி சுகாதாரத்துறையினர் தடுப்பு நடவடிக்கை மேற்கொண்டனர்.
இந்நிலையில் நோய் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சுகாதார பணி மேற்கொண்டு குடிநீர் தொட்டிகளைச் சுத்தம் செய்தனர். இந்நிலையில், கொசுக்கள் மூலம் பரவும் இந்த நோய் பாதிப்பு குள்ளங்கரடு, ஜேஜே நகர், வரதம்பாளையம் பகுதி வரை பரவி வருகிறது. இந்த நோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 200ஆக உயர்ந்துள்ளது.
குள்ளங்கரடு பகுதியைச் சேர்ந்த கண்ணம்மாள், சித்ரா, சாவித்திரி, லட்சுமி, முத்தாயம்மாள், துளசி, ரங்கசாமி, ரங்கம்மாள் ஆகியோர் நடக்க முடியாமல் கால்வலி, உடம்பு வலியால் அவதிப்படுகின்றனர். நோயின் தாக்கம் குறையாமல் பரவுவதால் சத்தியமங்கலம் நகராட்சி சுகாதாரத்துறை சிறப்பு முகாம் நடத்தி நோய் மேலும் பரவாமல் தடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க:
நிர்பயா வழக்கு: மத்திய அரசின் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு