ஈரோடு: சாலை விபத்தில் மரணமடைந்த நால்வர் குடும்பத்திற்கு தலா ஒரு லட்சம் ரூபாய் முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கப்பட்டது.
ஈரோடு அடுத்துள்ள லக்காபுரம் பகுதியில் நேற்று (செப்.4) காலையில் சிவகிரியில் இருந்து ஈரோடு நோக்கி வந்த அரசுப் பேருந்து மோதிய விபத்தில் இரண்டு இருசக்கர வாகனத்தில் வந்த மொடக்குறிச்சி குளூர் பகுதியில் வசிக்கும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மோகம்புரி, பொங்கியம்மாள், பாலசுப்பிரமணியம், பாவாயம்மாள் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இச்சூழலில், உயிரிழந்தவருக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் முதலமைச்சர் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்கப்படும் என முதலமைச்சர் கே பழனிச்சாமி அறிவித்திருந்தார்.
இதனைத்தொடர்ந்து உயிரிழந்தவரின் வீட்டிற்குச் சென்ற தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கருப்பணன், மாவட்ட ஆட்சியர் கதிரவன் ஆகியோர் இணைந்து உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கான காசோலையை வழங்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தனர்.