ஈரோடு: சிமெண்ட் தயாரிப்பதற்கான மூலப்பொருள்களின் விலை உயர்ந்துள்ளதால் தனியார் நிறுவனங்களின் சிமெண்ட் விலை உயர்ந்துள்ளது.
பிரபல தனியார் நிறுவன ஒரு மூட்டை சிமெண்ட்டின் விலை 450 முதல் 500 ரூபாய் வரை விற்பனை ஆகிறது. இதனால் வீடு உள்ளிட்ட கட்டுமான பணிகளை ஆரம்பித்துள்ள பொதுமக்கள் மற்றும் கட்டுமான நிறுவனத்தினர் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
இந்நிலையில் அரசு கூட்டுறவு நிறுவனமான டான்செம் நிறுவனத்தின் மூலம் அரசு சிமெண்ட் உற்பத்தி செய்யப்பட்டு தமிழ்நாடு முழுவதும் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பகுதியில் உள்ள கூட்டுறவு வீட்டு வசதி சங்கங்கள் சிமெண்ட் கொள்முதல் செய்து வீடு கட்டுவோருக்கு நியாயமான விலையில் ஒரு மூட்டை ரூ.360-க்கு விற்பனை செய்கிறது.
தனியார் நிறுவனங்களின் சிமெண்ட் விலை உயர்வால் தற்போது ஈரோடு மாவட்டத்தில் அரசு சிமெண்டிற்கு வரவேற்பு அதிகரித்துள்ளது. இதனால் கூட்டுறவு வீட்டு வசதி சங்கங்கள் கூடுதலாக சிமெண்ட் மூட்டைகளை கொள்முதல் செய்து குடோன்களில் இருப்பு வைக்கும் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பகுதியில் அரசு சிமெண்ட் தேவைப்படுவோர் சத்தியமங்கலம் வட்ட கூட்டுறவு வீட்டு வசதி சங்கத்தை அணுகி குறைந்த விலையில் தரமான சிமெண்ட் வாங்கி பயன்பெறுமாறு கூட்டுறவு சங்க அலுவலர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.