சத்தியமங்கலம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள பெரியூர், செண்பகபுதூர், ஜல்லியூர், மேட்டுர் மற்றும் கடம்பூர் மலைப்பகுதிகளில் சுமார் 10 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் மரவள்ளி பயிரிடப்பட்டுள்ளது. 10 மாத காலப் பயிரான மரவள்ளிக் கிழங்கு அறுவடைப்பணி தற்போது தொடங்கியுள்ளது. ஒரு ஏக்கர் பரப்பளவில் மரவள்ளி பயிரிட ரூ.20 ஆயிரம் செலவாகிறது. இங்கு அறுவடை செய்யப்படும் மரவள்ளிக் கிழங்குகளை வியாபாரிகள் விலை பேசி சவ்வரிசி தயாரிப்பதற்காகச் சேலம் மற்றும் ஆத்தூர் பகுதிகளில் உள்ள சேகோ ஆலைகளுக்கு அனுப்பி வைக்கின்றனர்.
இந்நிலையில் மரவள்ளிக் கிழங்கு அப்பளம் தயாரிப்பதற்குத் தேவையான முக்கிய மூலப்பொருளாக இருப்பதால், புதுச்சேரியில் உள்ள வியாபாரிகள் சத்தியமங்கலம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள மரவள்ளிக் கிழங்கை அதிக விலைபேசி வாங்கி செல்வதாக விவசாயிகள் மகிழ்ச்சியுடன் கூறுகின்றனர். கடந்த ஆண்டு மரவள்ளிக் கிழங்கு டன் ஒன்றுக்கு ரு.6 ஆயிரம் முதல் 8 ஆயிரம் வரை விலை போன நிலையில், தற்போது டன் ஒன்றுக்கு ரூ.12 ஆயிரத்திற்கு விற்பனையாகிறது. ஒரு ஏக்கருக்கு 15 முதல் 20 டன்கள் வரை விளைச்சல் உள்ளதால் ஏக்கர் ஒன்றுக்குச் செலவு போக ரு.1.50 லட்சம் வரை லாபம் கிடைப்பதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.