ஈரோடு: சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் பண்ணாரி அம்மன் கோயில் வனப்பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் வசித்து வருகின்றன.
இந்த யானைகள் அவ்வப்போது வனப்பகுதியை விட்டு வெளியேறி, தமிழ்நாடு-கர்நாடக மாநிலத்தை இணைக்கும் சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் வலம் வருவதை வழக்கமாக கொண்டுள்ளது.
இந்நிலையில் இன்று (அக்.07) அதிகாலை வனப்பகுதியைவிட்டு வெளியேறிய ஒற்றைக் காட்டு யானை பண்ணாரி அம்மன் கோயில் வளாகத்திற்குள் புகுந்தது.
காட்டு யானை கோயில் வளாகத்தில் சுற்றித் திரிவதைக் கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக வனத்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர்.
இருசக்கர வாகனம் சேதம்
இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர், யானையை வனப்பகுதிக்குள் விரட்ட முயற்சித்தனர்.
அப்போது கோயில் வளாகத்தில் இருந்த தள்ளுவண்டி கடையை சேதப்படுத்திய யானை அங்கிருந்த இருசக்கர வாகனத்தை தும்பிக்கையால் கீழே தள்ளிவிட்டு மிதித்து சேதப்படுத்தியது. சுமார் அரை மணிநேரப் போராட்டத்திற்குப் பிறகு, யானையை பட்டாசு வெடித்து வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர்.
இதையும் படிங்க: குட்டியுடன் அலையும் பெண் யானை: வாகன ஓட்டிகள் அவதி