ஈரோடு மாவட்டம் பவானி கூடுதுறையில் அமைந்துள்ளது சங்கேமேஸ்வரர் கோயில். மிகவும் பிரசித்தி பெற்ற இந்தக் கோயிலுக்கு 40 ஆண்டுகளுக்கு முன்பு பக்தர் ஒருவரின் மூலமாக வேதநாயகி யானை அளிக்கப்பட்டது. இந்த யானை கடந்த இரண்டு ஆண்டுகளாகவே நீரிழிவு நோயால் பெரிதும் பாதிக்கப்பட்டு இருந்தது. பின்னர், மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின் பேரில் கோயில் நிர்வாகம் சிகிச்சை அளித்து வந்தது.
இதையடுத்து யானையை மீட்டு உரிய மருத்துவ சிகிச்சைகள் வழங்க வனத்துறைக்கு உத்தரவிடக்கோரி, விலங்கின ஆர்வலர் முரளிதரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். நேற்று வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ள யானையை ஆய்வு செய்து, அதற்கு தேவையான மருத்துவ உதவிகளை வழங்க தலைமை வனப் பாதுகாவலருக்கு உத்தரவிட்டனர்.
ஆனால், கால் வீக்கம் ஏற்பட்டு நடக்க முடியாமலும் கடந்த 10 நாட்களாக சரியாக உணவு உட்கொள்ள முடியாமலும் அவதிப்பட்டு இருந்த வேதநாயகி யானை, இன்று அதிகாலையில் திடீர் என்று உயிரிழந்தது.
இந்நிலையில் கொடுமுடியைச் சேர்ந்த தாஜ் என்பவர் உயிரிழந்த கோயில் யானை வேத நாயகிக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இஸ்லாமியரான இவர் யானைப் பிரியர் மட்டுமின்றி, விலங்குகள் மீது அலாதி அன்புகொண்டவர். இவர் கூடுதுறை வரும்போதெல்லாம் யானை வேதநாயகியை பார்த்துவிட்டுச் செல்வாராம். மேலும் அதன் உடல்நிலை குறித்தும் கட்டாயம் விசாரித்து செல்வது தாஜின் பழக்கமாக இருந்துள்ளது. மதங்களைத் தாண்டி, கோயில் யானை மீது அன்பு செலுத்திய இஸ்லாமிய பெரியவர் பிரிவினைவாதிகளுக்கு நிச்சயம் சிம்மசொப்பனமாக இருப்பார் என்பதில் ஐயமில்லை.
இதையும் படிங்க:
கோயில் யானைக்கு மருத்துவ கொடை வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவு!