ஈரோடு மாநகராட்சியில் மேயர் நாகரத்தினம், துணை மேயர் தலைமையில் இன்று (ஆக.30) நடந்த மாமன்ற உறுப்பினர்களின் சாதாரண கூட்டத்தில் மாநகராட்சிக்கு உட்பட்ட நான்கு மண்டலங்களைச் சேர்ந்த 60 வார்டு கவுன்சிலர்கள் பங்கேற்றனர். பல்வேறு பிரச்னைகளுக்கு மாமன்ற உறுப்பினர்கள் முன் வைத்த கோரிக்கைகளுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.
அடிப்படை வசதிகள் அமைக்க கோரிக்கை: இதில் 8ஆவது வார்டு திமுக கவுன்சிலர் ஆதி ஸ்ரீதர் என்பவர், கடந்த மார்ச் மாதம் 'மக்களைத்தேடி மேயர்' திட்டத்தின்கீழ் நடந்த நிகழ்ச்சியில் மேயரிடம், வார்டு பகுதியில் குடிநீர் வசதி, சாக்கடை வசதி, தெரு விளக்கு வசதி உள்ளிட்டப்பல்வேறு பிரச்னைகளுக்குத் தீர்வு எட்டப்படாமல் உள்ளது குறித்து புகார் அளித்துள்ளார்.
தொடர்ந்து, இதுகுறித்து மீண்டும் ஏப்ரல் மாதம் மேயர் அலுவலகத்தில் சென்று புகார் மனு அளித்துள்ளார். ஆனால், மாநகராட்சி மேயர், கவுன்சிலரின் அடிப்படை வசதிகள்கோரிய புகார் மனுவிற்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இருப்பினும், அவர் கடந்த ஜூன் மாதம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த சட்டப்பேரவை ஆய்வுக்குழு கூட்டத்தில் இதுகுறித்து புகார் அளித்துள்ளார்.
மேயர் முதல் மாவட்ட ஆட்சியர் வரை புகார்: தொடர்ந்து, ஜூலை மாதம் மண்டல வாரியாக நடந்த கூட்டத்தில் மனு அளித்துள்ளார். இருப்பினும் கவுன்சிலர் அளித்த மனு மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததைத்தொடர்ந்து, அவர் ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த குறைதீர்ப்பு நாள் கூட்டத்திலும் புகார் மனு அளித்துள்ளார். இவ்வாறாக பல முறை தனது பகுதியில் அடிப்படை வசதிகள் செய்துதரக்கோரி அடுக்கடுக்காக மனு அளித்து வந்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்ற குற்றம்சாட்டு அப்பகுதியினரிடையே வலுத்துள்ளது.
மாமன்ற கூட்டத்தில் ஒலித்த கவுன்சிலர் குரல்: இவ்வாறாக, குடிநீர் வசதி, சாக்கடை வசதி, தெரு விளக்கு வசதி உள்ளிட்டப் பல்வேறு பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பதற்கு அரசு நிதி ஒதுக்கி உள்ளநிலையிலும் ஈரோடு மாநகராட்சியில் 8ஆவது வார்டு பகுதியில் எந்த விதமான அடிப்படை வசதிகளையும் செய்து தராமல் உள்ளதாக அப்பகுதியினர் வேதனைத் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து பல முறை மேயர் முதல் மாவட்ட ஆட்சியர் வரையில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காமல் புறக்கணிப்பதாக உள்ளதாக 8ஆவது வார்டு கவுன்சிலர் ஆதி ஸ்ரீதர் இன்று நடந்த மாமன்றகூட்டத்தில் குற்றம் சாட்டினார்.
மாநகராட்சி நடவடிக்கை எடுக்குமா? மாமன்றக்கூட்டத்தில் பேசிய கவுன்சிலர் ஆதி ஸ்ரீதர், 'ஈரோடு மாநகராட்சியில் முறையாக நிதி ஒதுக்கி மக்கள் பிரச்னைகளுக்குத் தீர்வு எட்டாமல் இருந்து வருவது வேடிக்கையாக உள்ளது. மாநகராட்சி அலுவலர்கள், தனது பகுதியில் வரன்முறைப்படுத்தப்பட்ட மனைகளுக்கு, உள்ளூர் திட்ட குழுமத்தின் மூலம் வீட்டு மனைகளுக்கு மட்டுமே ஒப்புதல் அளிக்கின்றனர்.
இதனை வார்டு கவுன்சிலர்களுக்கு முறையாக தெரியப்படுத்தவும் இல்லை. வீட்டுமனைகள் வீடுகளாக கட்டி முடித்த பின்பு முறையான சாக்கடை வசதி, சாலை வசதிகள் இல்லை என்று வீட்டு மனைகளை வாங்கியவர்கள் தங்களிடமே வந்து புகார் கூறுகின்றனர். மாநகராட்சி அலுவலர்கள் வீட்டு மனைகளுக்கு ஒப்புதல் அளிக்கும் முன்பாகவே, தங்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்' என்றார்.
இவ்வாறு திமுகவைச் சேர்ந்த 8ஆவது வார்டு கவுன்சிலரே, திமுக ஆட்சியில் மேயராக உள்ள நாகரத்தினம் மற்றும் துணை மேயர் உள்ளிட்ட அலுவலர்கள் மீது புகார் கூறியது பரபரப்பினை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க: மாநில அரசின் கொள்கைகளுக்கு கட்டுப்பட்டு பல்கலைக்கழகங்கள் செயல்பட வேண்டும் - முதலமைச்சர்