பெருந்துறை தொகுதியின் தற்போதைய சட்டப்பேரவை உறுப்பினராக இருப்பவர் தோப்பு வெங்கடாசலம். அதிமுகவைச் சேர்ந்த இவர் கடந்த 2011 தேர்தலில் பெருந்துறையில் போட்டியிட்டு வெற்றி பெற்றதோடு, ஜெயலலிதா அமைச்சரவையிலும் இடம்பெற்றிருந்தார். பின்னர் அதே தொகுதியில் 2016 தேர்தலில் வெற்றி பெற்றிருந்தும், தோப்பு வெங்கடாசலத்திற்கு அமைச்சர் பதவி வழங்கப்படவில்லை. அதிலிருந்து அவர் அதிருப்தியில் இருந்து வந்தார்.
இந்நிலையில், வரும் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட தனக்கு சீட் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருந்த வெங்கடாசலத்திற்கு அதிமுக தலைமை அதிர்ச்சி கொடுத்தது. பெருந்துறை ஒன்றியக் கவுன்சிலர் ஜெயக்குமார் என்பவருக்கு சீட் வழங்கப்பட்டது. இதையடுத்து தன் ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்திய தோப்பு வெங்கடாசலம், விசுவாசமாக இருந்த என்னை, எச்சிலையை தூக்கிப் போடுவதைப் போல போட்டு விட்டதாகவும், என் நிலை எந்தத் தொண்டனுக்கும் வரக்கூடாது என்றும் கண் கலங்கினார். அதனைப் பார்த்து அவருடைய ஆதரவாளர்களும் குமுறி அழுதனர்.
அதன் பின்னரும், எப்படியாவது ஜெயக்குமாருக்கு பதிலாக தன்னை வேட்பாளராக அறிவிக்க பல வழிகளில் அவர் முயற்சித்தும், பயனளிக்கவில்லை. இதனையடுத்து பெருந்துறை தொகுதியில் சுயேட்சையாக களமிறங்குவது என முடிவெடுத்த தோப்பு வெங்கடாசலம், பெருந்துறை வட்டாச்சியர் அலுவலகத்தில் இன்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
தோப்பு வெங்கடாசலம் கட்சி அறிவித்த வேட்பாளருக்கு எதிராக, சுயேட்சையாகக் களமிறங்கியிருப்பதால், அவர் விரைவில் அதிமுகவில் இருந்து நீக்கப்படுவார் எனக் கூறப்படுகிறது. முன்னதாக, சேந்தமங்கலம் அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் சந்திரசேகரன், தனக்கு கட்சி வாய்ப்பு அளிக்காததால் சுயேட்சையாக போட்டியிட இன்று மனு தாக்கல் செய்ததை அடுத்து, அவர் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டிருப்பது கவனிக்கத்தக்கது.
இதையும் படிங்க: ஏஎஸ்பி வெள்ளத்துரை திடீர் இடமாற்றம்: மனைவி தேர்தலில் போட்டி காரணமா?