ஈரோடு மாவட்டம் தூக்கநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றியத்திற்குள்பட்ட ஐந்துக்கும் மேற்பட்ட ஊராட்சிகளில் உள்ள கிராமங்களுக்கு ஏற்கனவே கூட்டுக்குடிநீர் திட்டம் அமைக்கப்பட்டிருந்தது. இந்தத் திட்டத்தை மேம்படுத்தி ரூ.13 கோடி மதிப்பீட்டில் கள்ளிப்பட்டி, தூக்கநாயக்கன்பாளையம் ஆகிய இரு பகுதிகளில் விரிவுபடுத்தப்பட்ட திட்டம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தை அமைச்சர்கள் செங்கோட்டையன், கே.சி. கருப்பணன் ஆகியோர் தொடங்கிவைத்து சிறப்புரையாற்றினர். பின்னர் பேசிய கே.சி. கருப்பணன், மக்களின் நலன் அறிந்து செயல்படும் அரசாக இந்த அரசு திகழ்கிறது என்றும், சாலைகள் மேம்பாடு, விவசாயிகளின் குறைகளைக் களையுதல் போன்ற எண்ணற்ற திட்டங்களை உருவாக்கி செயல்படுத்திவருவதாகவும் தெரிவித்தார்.
![தூக்கநாயக்கன்பாளையம் ஒன்றியத்தில் அமைச்சர் செங்கோட்டையன், அமைச்சர் கருப்பணன் நிகழ்ச்சி](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-erd-04-sathy-mininsters-function-vis-tn10009_23022020151726_2302f_1582451246_658.jpg)
தொடர்ந்து விழாவில் பேசிய பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன், தமிழ்நாட்டில் அனைத்து துறைகளிலும் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டு சிறப்பாகச் செயல்பட்டுவருவதாகவும் தற்போது மக்கள் தங்களது குறைகளைத் தெரிவிக்க அலுவலர்களைத் தேடிச்செல்ல வேண்டியதில்லை, அலுவலர்களே மக்களின் இல்லம் தேடிவந்து குறைகளைக் கேட்டறியும் திட்டத்தை முதலமைச்சர் பழனிசாமி செயல்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்தார்.
இதையடுத்து முதியோர் உதவித்தொகை வீட்டுமனைப்பட்டா உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டன. இவ்விழாவில் அந்தியூர் சட்டப்பேரவை உறுப்பினர் ராஜாகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியர் கதிரவன், கோட்டாட்சியர் ஜெயராமன், குடிநீர் வடிகால் வாரிய பொறியாளர் சுதாமகேஸ், மாவட்ட ஊராட்சித் தலைவர் நவமணி கந்தசாமி உள்பட பலர் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க; கோயில் திருவிழாவில் தண்ணீர் பந்தல் அமைத்த இஸ்லாமிய இளைஞர்கள்! - குவியும் பாராட்டுகள்