ஈரோடு: பவானிசாகர் அணை முன்பு பவானி ஆற்றின் குறுக்கே, பழைய ஆற்றுப் பாலம் பழுதடைந்து பாலத்தின் நடுவே துளைகள் விழுந்ததால் கடந்த மூன்றாண்டுகளுக்கு முன்பு வாகனப் போக்குவரத்து தடை செய்யப்பட்டது.
இதன் காரணமாக புங்கார், பெரியார் நகர், காராச்சிக்கொரை, புதுபீர்கடவு, பட்டரமங்கலம், கொத்தமங்கலம், தெங்குமரஹாடா, அல்லி மாயாறு, கல்லாம்பாளையம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.
இதனால் அப்பகுதியிலுள்ள மக்கள் சுமார் ஐந்து கிலோமீட்டர் தூரம் சுற்றி, தொட்டம்பாளையம் ஆற்றுப் பாலத்தின் வழியாகப் பயணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
இந்நிலையில் பழுதடைந்த பழைய பாலத்திற்கு பதிலாக புதிய பாலம் கட்ட ரூ. 8 கோடி நிதி ஒதுக்கப்பட்டு, பழுதடைந்த பாலத்தின் அருகே பவானி ஆற்றின் குறுக்கே பாலம் கட்டுவதற்கான கட்டுமான பணி தொடங்கி நடைபெற்றுவருகிறது.
தற்போது பாலம் கட்டுமான பணி 80 சதவீதம் நிறைவு பெற்ற நிலையில், கட்டுமான பணியில் தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். மூன்று மாதங்களில் பாலம் கட்டுமான பணி நிறைவடைந்து போக்குவரத்து தொடங்கும் என நெடுஞ்சாலைத் துறை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வாள்வீச்சு வீராங்கனை நன்றி!