ஈரோடு: தமிழ்நாடு பாஜகவின் மாநிலத் தலைவராக இருந்த எல். முருகன் ஒன்றிய இணை அமைச்சராக நியமிக்கப்பட்டதை அடுத்து, பாஜக மாநிலத் தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ள அண்ணாமலை ஜூலை 16ஆம் தேதி பொறுப்பேற்க உள்ளார்.
இந்நிலையில், இன்று (ஜூலை 14) ஈரோடு பெருந்துறை சாலையில் உள்ள ஈஸ்வரமூர்த்தி மண்டபம் அருகே அண்ணாமலைக்கு பாஜகவினர் உற்சாக வரவேற்பை அளித்தனர். அதில் பல இளைஞர், கட்சியினர் அவருடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.
அடுத்த தேர்தலில் 150...
அவர் வரவேற்பை ஏற்ற அண்ணாமலை ஈரோடு மாவட்ட பாஜகவினர் இடையே பேசியதாவது, "2021 சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவின் நான்கு சட்டப்பேரவை உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டதுபோல, வரும் 2026ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் நிச்சயமாக பாஜக சார்பாக 150 சட்டப்பேரவை உறுப்பினர் தேர்ந்தெடுக்கப்படுவர்.
பாஜகவை பொறுத்தவரையில் நுழைவதுதான் கடினம். மேற்கு வங்கத்தில் 2016ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவையில் நுழைந்தது மூவர் மட்டுமே. ஆனால், 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் 77 உறுப்பினர்கள் வெற்றிபெற்றுள்ளனர்.
ஈரோடு பாஜகவின் மண்
நிச்சயமாக வருகின்ற காலம் பாஜகவின் காலம். ஈரோட்டில் பாஜகவின் வளர்ச்சி மிகப்பெரிய வளர்ச்சியாக இருக்கும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. மேலும், ஈரோடு விவசாயிகள் நிறைந்த பூமி. பாஜகவின் கொள்கைகளைப் புரிந்துகொள்ளும் பூமி. எனவே ஈரோடு சார்பாக வரும் மக்களவைத் தேர்தலில் நிச்சயம் ஒரு மக்களவை உறுப்பினர் தேர்ந்தெடுக்கப்படுவார்.
தலைவன் என்பது பதவி இல்லை. சேவை செய்ய வேண்டும் என்பதற்காக தனக்கு அப்பொறுப்பை பாஜகவின் தேசிய தலைவர் நட்டா அளித்துள்ளார். கட்சியிலிருந்து விலகியிருக்கும் உறுப்பினர்களை ஒன்றிணைத்து குழுவாகப் பயணிப்பதே எனது முதல் வேலை.
தேரை இழுக்க வேண்டும் என்றால் ஊர்கூட வேண்டும். அது, தனிமனிதனால் முடியாது. அனைவரும் இணைந்து கட்சிக்குப் புது ரத்தம் பாய்ச்சுவோம்" என்றார்.