கோயம்புத்தூர் மாவட்டம் தியாகராய நகரைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் நவ.2ஆம் தேதி கழுத்தை அறுத்துக்கொண்டு, தற்கொலைக்கு முயன்றார்.
இவரை உறவினர்கள் மீட்டு, மாவட்ட அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து குணமடைய செய்தனர். இருப்பினும், அப்பெண்ணுக்கு மூச்சுத்திணறல், கழுத்து வலி ஏற்பட்டுள்ளது.
இதனால் மருத்துவர்கள் பெண்ணின் கழுத்துப்பகுதியை சிடி ஸ்கேன் செய்து பார்த்துள்ளனர். அப்போது தண்டுவடப்பகுதிக்கு அருகில் தையல் ஊசி இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இது குறித்து பெண்ணிடம் கேட்டபோது, தையல் ஊசியை பயன்படுத்தி கழுத்தில் குத்தி தற்கொலைக்கு முயன்றதாகவும், ஊசியை முழுவதும் செலுத்தியதாகவும் தெரிவித்துள்ளார்.
சவாலான சிகிச்சை
ஊசியால் மூளைக்கு செல்லும் ரத்த குழாய்க்கு ஆபத்து என்பதால், உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் முடிவு செய்து சிகிச்சையை தொடங்கினர். பல மணிநேர போராட்டத்திற்கு பிறகு, 7.5 செ.மீ. நீளமுள்ள ஊசி அகற்றப்பட்டது.
இது குறித்து கோயம்புத்தூர் அரசு மருத்துவமனை முதல்வர் நிர்மலா கூறுகையில், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு செய்யப்பட்ட அறுவை சிகிச்சை மிகவும் சிக்கலானது. இருப்பினும் மருத்துவர்கள் மிகுந்த கவனத்துடன் செய்து பெண்ணை காப்பாற்றினர். தற்கொலை செய்துகொள்ளும் எண்ணம் தவிர்க்கப்பட வேண்டியது" என்றார்.
இதையும் படிங்க: விருப்பமின்றி நடந்த திருமணம்: இரண்டே நாளில் தற்கொலை செய்த புதுப்பெண்