கோவை மாவட்டம், வால்பாறையில் ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட அடர்ந்த வனப்பகுதிகளில் காடர், முதுவர், புலையர் இன பழங்குடி மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 2006ஆம் ஆண்டு வன உரிமைச் சட்டப்படி அவர்கள் வசிக்கும் பகுதியில் பட்டா வழங்க உரிமை வழங்கப்பட்டது.
இந்நிலையில், 2017ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் கள்ளர் செட்டில்மெண்ட் பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து, அவர்கள் மாற்று இடத்தில் குடி அமைத்தனர். அதன் பின்னர் வனத்துறையினர் அவர்களை அப்புறப்படுத்தி, அருகில் உள்ள தேயிலைத் தோட்டத்தில் வசிக்க உத்தரவிட்டனர்.
இந்நிலையில், பழங்குடியின மக்கள் தங்களுக்கு வனப்பகுதியிலேயே இடம் ஒதுக்கவும், அந்த இடத்திற்கு பட்டா வழங்கவும் வலியுறுத்தி பலமுறை வட்டாட்சியர், மாவட்ட ஆட்சியர், சார் ஆட்சியர் மற்றும் வனத்துறைக்கு மனு அளித்தனர்.
ஆனால், எவ்வித நடவடிக்கையும் எடுக்காத பட்சத்தில் அவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் எனத் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து வால்பாறை வட்டாட்சியர் ராஜன், காவல் ஆய்வாளர் மகேஸ்வரி தலைமையில் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில், வால்பாறை வட்டாட்சியர் ராஜன், காவல் ஆய்வாளர் மகேஸ்வரி, வருவாய்த்துறையினர் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட பழங்குடி மக்கள் கலந்துகொண்டனர்.
விரைவில் வனத்துறையின் தலைமை அலுவலர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி தக்கமுடிவு எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். அதைத்தொடர்ந்து, போராட்டம் விலக்கிக்கொள்ளப்பட்டது.