குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவிற்கு எதிர்ப்புத் தெரிவித்து, கோவை தெற்கு மாவட்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் திருவள்ளுவர் திடலில் மத்திய அரசைக் கண்டித்து மாவட்டத் தலைவர் உமர் பாருக் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மாநிலப் பொருளாளர் மயிலை அப்துல் ரஹீம் கண்டன உரையில், "தேசிய குடியுரிமை திருத்த மசோதாவை மத்திய அரசு தாக்கல் செய்து நிறைவேற்றியிருப்பது அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிரானது, மத அடிப்படையில் மக்களைப் பிளவுபடுத்தக் கூடாது என அரசியல் சாசனத்தில் உள்ளது.
இந்தச் சட்டத்திருத்தத்தின் மூலம் நாட்டிற்கு எவ்வித நன்மையும் ஏற்படப்போவதில்லை. பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளிலிருந்து அகதிகளாக வந்தவர்களுக்கு குடியுரிமை வழங்குவதே மசோதாவின் நோக்கம் என மத்திய அரசு சொல்கிறது. அதில் முஸ்லிம்களுக்கும் இலங்கைத் தமிழர்களுக்கும் குடியுரிமை மறுக்கப்பட்டிருப்பது எந்த வகை நியாயம்.
முஸ்லிம்களின் உரிமையைப் பறிக்கும் மத்திய அரசின் போக்கு நாட்டை மத எதிர்ப்புக்கு உட்படுத்துவதாகும். பொருளாதார வீழ்ச்சியிலும் இந்தியா சிக்கித்தவிக்கிறது" எனக் கூறினார்.
மேலும் மத்திய அரசைக் கண்டித்து கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கும் மேற்பட்டோரை காவல் துறையினர் கைது செய்தனர்.