கோயம்புத்தூர்: அரசு மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள மன அழுத்தத்திற்கான அதிதீவிர சிகிச்சைப்பிரிவை அமைச்சர் மா.சுப்ரமணியன் தொடங்கி வைத்தார். மேலும் அங்கு அமைக்கப்பட்டுள்ள புதிய இருதய தீவிர சிகிச்சை பிரிவு மற்றும் குழந்தைகளுக்கான அதி தீவிர சிகிச்சை பிரிவு உட்பட 110 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் ஜெய்கா கட்டுமான பணிகளை ஆய்வு செய்தார். அதனை தொடர்ந்து 200 பேருக்கு இலவச கண் கண்ணாடிகளை வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளில் 2,099 படுக்கைகள் கொண்ட அதிதீவிர சிகிச்சை பிரிவுகள் முதலமைச்சரால் தொடங்கி வைக்கப்பட்ட நிலையில், கோவை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் 32 படுக்கைகளுடன் கூடிய அதி தீவிர சிகிச்சை பிரிவு இன்று பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
இதில் அனைத்து வசதிகளுடனான நவீன உபகரணங்களை கொண்ட சிகிச்சை பிரிவு உள்ளதால் நோயாளிகளுக்கு மிகுந்த பயன் தரும். சிஎஸ்ஆர் நிதியில் 12 படுக்கைகள் கொண்ட தனி தீவிர சிகிச்சை பிரிவில் தற்கொலை முயற்சி செய்யும் நபர்களுக்கு தனி சிகிச்சை பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. மேலும் கோவை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் 110 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஜெய்கா நிதியில் கட்டப்படும் கூடுதல் கட்டட பணிகள் இவ்வாண்டு இறுதிக்குள் முடிவடைய உள்ளது. வெஸ்ட்னைல் வைரஸ் பாதிப்பு கேரளாவில் ஒருவருக்கு மட்டும் ஏற்பட்டுள்ளது.
தமிழ்நாட்டிற்கு நோய் பரவல் வராமல் தடுக்க மாவட்ட நிர்வாகம் மற்றும் சுகாதார துறை இணைந்து நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. குரங்கம்மை நோய் இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ் போன்ற 12 நாடுகளில் பரவ தொடங்கியுள்ளது. வெளி நாடுகளிலிருந்து வருபவர்களை கண்காணிக்க அனைத்து சர்வதேச விமான நிலையங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. யூ.கே நாட்டிலிருந்து சென்னை வந்த விமான பயணி ஒருவரின் முகத்தில் கொப்புளம் இருந்ததால் அவரது ரத்த மாதிரி பூனே ஆய்வகத்திற்கு அனுப்பியதில் நெகட்டிவ் என சான்று வந்துள்ளது.
குரங்கம்மை நோய் குறித்த அறிகுறியோ சந்தேகமோ இருந்தால் உடனடியாக அரசு மருத்துவமனைக்கு செல்ல அறிவுறுத்தியுள்ளோம். எனவே மக்கள் அந்நோய் குறித்து பயப்பட வேண்டாம். கோவை விமான நிலைய விரிவாக்க பணிகள் 70% முடிவடைந்துள்ள சூழலில் இரு ஆண்டுகளில் பணி முடிவடையும். இதேபோல் நோயாளிகளின் தேவைக்கு தகுந்தபடி கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கட்டமைப்பு மேம்படுத்தப்படும். குறைவான குழந்தை சிசு மரணத்தில் தமிழ்நாடு இரண்டாவது இடத்தில் உள்ளது. கேரளா முதல் இடத்தில் உள்ளது. சிசு மரணம் இல்லாத தமிழ்நாடாக மாற்ற வேண்டும் என்ற இலக்குடன் முதலமைச்சர் தீவிரமாக கண்காணிக்க உத்தரவிட்டுள்ளார்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் விண்ணப்பித்த மாணவர்கள் குலுக்கல் முறையில் தேர்வு