அதிமுக கட்சியின் செய்தித் தொடர்பாளராக இருந்த புகழேந்தியை சமீபத்தில் அதிமுக தலைமை கட்சியிலிருந்து நீக்கியது. இந்நிலையில், நேற்று கோவையின் பல்வேறு பகுதிகளில் புகழேந்தி நீக்கத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து கோவை கழக உண்மை விசுவாசிகள் என்ற பெயரில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
ஜெயலலிதாவிற்குப் பிணை வழங்கிய புகழேந்தி நீக்கத்திற்கு கண்டனம்...
அனாதை கட்சியா அதிமுக?
அதிமுகவை அவமானப்படுத்திய கூட்டணிக் கட்சிகளைக் கண்டித்தால் கட்சியிலிருந்து நீக்குவதா?
மானமிகு தொண்டர்களே இந்தத் தலைமை தேவையா?
என அந்தச் சுவரொட்டியில் வாசகங்கள் இடம்பெற்றுள்ளன. கோவையில் உக்கடம், கோட்டைமேடு, டவுன்ஹால், ரயில் நிலையம் உள்பட பல்வேறு பகுதிகளில் இந்தச் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
ஜெ.வின் குட்புக் டு நீக்கம் வரை...
அதிமுகவின் கர்நாடக மாநிலச் செயலாளராக இருந்த புகழேந்தி ஜெயலலிதா, சசிகலா ஆகியோரின் குட்புக்கில் இடம்பிடித்தவர். பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் ஜெ.வும், சசியும் அடைக்கப்பட்டிருந்த சமயத்தில் அவர்களுக்குப் பல்வேறு வசதிகளைச் செய்துகொடுத்தவர் புகழேந்தி.
ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின் சசிகலா நான்கு ஆண்டுகள் சிறையில் இருந்தபோதும் மாநிலச் செயலாளர் என்ற முறையில் கவனித்துக்கொண்டார். டிடிவி தினகரனுடன் அதிமுகவை விட்டு வெளியேறிய பின்னர், அவரது மாநிலச் செயலாளர் பதவி பறிக்கப்பட்டது.
பின்னர் டிடிவி தினகரனுடன் ஏற்பட்ட மன வருத்தம் காரணமாக 2019 நவம்பரில் அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்து தமிழ்நாடு அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தினார். 2020இல் அதிமுகவில் மீண்டும் இணைந்த அவருக்குச் செய்தித்தொடர்பாளர், புரட்சித்தலைவி பேரவை இணைச் செயலாளர் பதவிகள் வழங்கப்பட்டன.
இந்த நிலையில், தலைமைக் கழகத்திலிருந்து ஜூன் 14ஆம் தேதி ஒரு அறிக்கை வந்தது. அதில், "கட்சியின் கொள்கை குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கட்சியின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்துகொண்டதாலும், கட்சி கட்டுப்பாட்டை மீறி கட்சிக்கு களங்கமும், அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும்
வா. புகழேந்தி இன்று முதல் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்பட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார். கட்சி உடன்பிறப்புகள் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக் கொள்ளக்கூடாது" என இடம்பெற்றிருந்தது.
இது குறித்து புகழேந்தி செய்தியாளரிடம், அன்புமணி ஓபிஎஸ் குறித்துப் பேசியதற்குப் பதிலடியாகச் சில கருத்துகளைக் கூறியிருந்தார். 'ஓபிஎஸ்சை விமர்சிக்கும் அன்புமணி அதே ஓ. பன்னீர்செல்வம் கையெழுத்துப் போட்டதால்தான் இன்று மாநிலங்களவை உறுப்பினராக இருக்கிறார். அன்புமணி தேவையற்ற கருத்துகளைக் கூறிவருகிறார்' எனக் கண்டனம் தெரிவித்தார்.
மேலும் அவர், "பாமக வென்ற ஆறு தொகுதிகளில் மட்டுமே அக்கட்சிக்கு செல்வாக்கு உள்ளது, அதிமுக வெற்றிபெற்ற தொகுதிகளில் பாமகவுக்கு எந்தவிதமான வேலையும் இல்லை. எங்கள் கட்சியின் தலைவர்களை அவர்கள் குறை சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது.
ஒவ்வொரு முறையும் தேர்தல் நேரத்தில் கூட்டணி சேர்வதும், தேர்தல் முடிவுக்குப் பின்னர் மற்றவர்களை விமர்சனம் செய்வதுமே பாமகவுக்கு வாடிக்கையாக இருந்துவருகிறது, முதலில் உங்கள் தோல்விக்கான காரணத்தை ஆராய வேண்டும்" எனச் சரமாரியாக விளாசினார். இதையடுத்து, பாமக கொடுத்த அழுத்தத்தால் அவர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டிருக்கலாம் என அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.
கட்சியிலிருந்து நீக்கியது தொடர்பாக அவர்கள் (ஓபிஎஸ்-இபிஎஸ்) தெரிவித்திருந்த காரணம் தனது நற்பெயருக்குக் களங்கம் விளைவிப்பதாகக் கூறி, இருவரையும் அவதூறுச் சட்டத்தின்கீழ் தண்டிக்கக்கோரி புகழேந்தி, சென்னை எம்பி-எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் அவதூறு வழக்குத் தொடர்ந்தார்.
இந்த வழக்கில் ஓ. பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி செப்டம்பர் 14இல் முன்னிலையாக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில்தான் தற்போது கோவையில் புகழேந்திக்கு ஆதரவாகச் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: அக்டோபர்- நவம்பரில் மூன்றாம் அலை?