கோவையைச் சேர்ந்த லாட்டரி மார்ட்டின் என்ற தொழிலதிபர், மேற்கு வங்காளம், அஸ்ஸாம் போன்ற பகுதிகளில் லாட்டரி தொழிலில் ஈடுபட்டு வருகிறார். திமுக தலைவர் கருணாநிதியின் கைவண்ணத்தில் உருவாகிய இளைஞன் திரைப்படத்தை தயாரித்தவரும் இந்த மார்ட்டின்தான். நாடு முழுவதும் லாட்டரி மார்ட்டின் சம்பந்தப்பட்ட 70 இடங்களில் கடந்த செவ்வாய்கிழமை தொடங்கி வருமானவரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
குறிப்பாக, மார்ட்டினின் ஊழியர்கள் வீட்டிலும் வருமான வரித்துறையினர் தீவிர விசாரணை நடத்தினர். தேர்தல் நேரம் என்பதாலும், மார்ட்டின் தி.மு.க ஆதரவாளர் என்பதாலும் இச்சோதனையில் உள்நோக்கம் இருப்பதாகக் கூறப்பட்டது. இந்நிலையில், மார்ட்டின் நிறுவனத்தில் காசாளராக இருக்கும் பழனி என்பவரின் சடலம் வெள்ளியங்காடு பகுதியில் உள்ள குட்டையிலிருந்து மீட்கப்பட்டுள்ளது.
காரமடையைச் சேர்ந்த பழனியை வருமானவரித்துறையினர் கடந்த இரண்டு நாள்களாக விசாரணை நடத்தியதாகவும், அப்போதே பழனி தனது கையை அறுத்துக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து, துடியலூரில் உள்ள வி.ஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பழனி, இன்று காலையில்தான் விடுவிக்கப்பட்டுள்ளார். இதைத்தொடர்ந்து, பழனி வெள்ளியங்காடு அருகே உள்ள மாநகராட்சி குடிநீர் சுத்திகரிக்கும் நிலையத்துக்கு எதிரே உள்ள குட்டையில் விழுந்து இறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பழனியின் உடலை மீட்டு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இதைதொடர்ந்து இன்று நள்ளிரவு மார்ட்டின் குழுமத்தில் நடைபெற்ற சோதனை முடிவில் கணக்கில் வராத பணம், நகை பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், லாட்டரி சீட்டு விற்பனையில் கணக்கில் வராத ரூ.535 கோடி பணம் சிக்கியது. நகையில் மதிப்பு ரூ.24 கோடிக்கு மேல் இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.