தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று (ஏப் 6) அமைதியான முறையில் நடைபெற்று முடிந்தது. மொத்தம் 71.79 விழுக்காடு வாக்குகள் பதிவாகியுள்ளதாகத் தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அலுவலர் சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் அனைத்து வாக்குச் சாவடிகளிலிருந்தும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்ளிட்டவை பாதுகாப்பு அறைக்கு எடுத்துச் செல்லப்பட்டுவருகின்றன. கோவையில் உள்ள 10 தொகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிகளிலிருந்து எடுத்துச் செல்லப்படும் வாக்குப்பதிவு இயந்திரங்கள், தடாகம் சாலையில் உள்ள அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் பாதுகாப்பான முறையில் வைக்கப்படுகின்றன.
கோவை தெற்குச் சட்டப்பேரவைத் தொகுதியின் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் கமல் ஹாசன் அந்தத் தொகுதிக்கு ஒதுக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறைக்குச் (strong room) சென்று பார்வையிட்டார்.
நேற்று சென்னையில் தனது வாக்கினைச் செலுத்திவிட்டு உடனே கோவை சென்ற அவர் தனது மகள் ஸ்ருதி ஹாசனுடன் கோவை தெற்குத் தொகுதிக்குள்பட்ட வாக்குச் சாவடிகளில் ஆய்வு மேற்கொண்டார்.