கோயம்புத்தூர்: மருதமலை முருகன் கோயிலுக்கு கோவை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் இருந்து மக்கள் முருகனை வழிப்படவும், சிலர் காவடி எடுத்தும், பால் குடம் எடுத்தும், அலகு குத்தியும் வேண்டுதலை நிறைவேற்ற ஆயிரக்கணக்கானோர் வருவர்.
கோயிலில் தேர் இழுத்தல் மிக விமர்சையாக கொண்டாடப்படும். பக்தர்கள் பலரும் சேர்ந்து தேரை கோவிலை சுற்றி இழுத்து வந்து வழிபடுவர். ஆனால் கரோனா வைரஸ் பரவல் காரணமாக மருதமலை கோயில் நிர்வாகம் இம்முறை மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தலின் படி சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
இது குறித்து கோயில் நிர்வாகத்தினர் கூறுகையில், “ஜனவரி 28ஆம் தேதி தைப்பூச நாளன்று அதிகாலை திருக்கல்யாணம் முடிந்ததும் தேரின் மேல் பகுதியில்லாமல் தேரானது இழுக்கப்படும், சக்கரங்கள் மட்டும் இருக்கின்ற தேரில் முருகனை வைத்து தேரானது இழுக்கப்படும். திருக்கல்யாணம் மற்றும் தேர் இழுக்கும் போது பொதுமக்களுக்கு அனுமதியில்லை.
அதன் பிறகு சுமார் 7 மணியளவில் இருந்து பொதுமக்கள் அனுமதிக்கப்படுவர். பாத யாத்திரை வரும் பக்தர்கள் தை பூசத்திற்கு முந்தைய தினம் கோயிலில் தங்க அனுமதி இல்லை. தை பூச நாளன்று வாகனங்கள் மேலே செல்ல அனுமதியில்லை. வாகனங்களை கீழே நிறுத்திவிட்டு கோயில் நிர்வாக பேருந்தில் மேலே செல்லலாம்.
கோயிலில் இரு இடங்களில் மருத்துவக் குழு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு வாகனங்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இந்த நடைமுறையானது 28, 29 ஆகிய இரு நாள்களுக்கு கடைப்பிடிக்கப்படும் கோயில் நிர்வாகம் கூறியுள்ளது.
இதையும் படிங்க : மருதமலை முருகன் கோயிலில் சூரசம்ஹாரம்