கோவை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் அக்கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் இன்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், “ டெல்லி விவசாயிகள் போராட்டத்தை மத்திய அரசு கொச்சைப்படுத்துகிறது. விவசாய சட்டங்களை எதிர்க்க வேண்டிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஆட்சியைக் காப்பாற்றிக் கொள்வதற்காக அதனை ஆதரித்துப் பேசுகிறார். மாநில உரிமைகள் பறிபோவது பற்றிக்கூட அவர் கவலைப்படவில்லை. இது தொடர்பாக வரும் 25 முதல் 31 ஆம் தேதி வரை மாநிலம் முழுவதும் 10 ஆயிரம் குழுக்கள் வீடுவீடாகச் சென்று மக்களை சந்தித்து பரப்புரை செய்யவுள்ளோம்.
கரோனாவால் வேலையில்லாமல் மக்கள் பட்டினியால் இருந்த போது ஐந்தாயிரம் ரூபாய் கொடுக்க மறுத்த முதலமைச்சர், இப்போது எப்படி பொங்கள் பரிசு 2,500 ரூபாய் கொடுக்கிறார்? தேர்தலை மனதில் வைத்தே இதனை அவர் அறிவித்துள்ளார். பணம் கொடுத்து மக்களை வாங்க நினைப்பது தவறானது.
அதிமுக-பாஜக கூட்டணியில் சமரசமற்ற போர் நடக்கின்றது. அது கொள்கையற்ற கூட்டணி. நடிகர் கமலின் கட்சி ஓட்டுகளை பிரிக்கத்தான் பயன்படும். அதனால்தான் அவரை பாஜகவின் பி டீம் என்கிறோம். உள்ளாட்சித் தேர்தல் முழுமையாக நடத்தப்படாமல் இருக்க அதிமுக அரசுதான் காரணம் “ எனக் குற்றஞ்சாட்டினார்.
இதையும் படிங்க: இந்தியாவில் சிறுத்தைகள் எண்ணிக்கை அதிகரிப்பு - பிரமதர் மோடி பாராட்டு