கோயமுத்தூர் மாவட்டம் பேரூர் சரகத்தில் வடவள்ளி, தொண்டாமுத்துார், காருண்யாநகர், ஆலாந்துறை, பேரூர், மதுக்கரை, கிணத்துக்கடவு, கே.ஜி., சாவடி ஆகிய, எட்டு காவல் நிலையங்கள் உள்ளன. இந்த காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில், அதிக அளவில் திருட்டு சம்பவங்கள் நடந்து வருகின்றன.
இதில் குறிப்பாக, வெளியூருக்கு செல்வோரின் வீடுகளின் பூட்டு உடைக்கப்பட்டு, நகை, பணம் திருடப்படுகிறது. இதுபோல் இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் முப்பத்திஎட்டுக்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் பதிவாகியுள்ளன. இதனை தடுக்கும் வகையில், வெளியூர்களுக்கு செல்லும் பொதுமக்கள், அந்தந்த காவல் நிலையங்களுக்கென்று, பிரத்யேகமாக ஒதுக்கப்பட்டுள்ள வாட்ஸ்ஆப் எண்ணுக்கு, தகவல் தெரிவித்து செல்லுமாறு, காவல் துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.
இது தொடர்பான நோட்டீஸ்களை, காவல் நிலைய எல்லைகளுக்குட்பட்ட, பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் ஒட்டி, விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். மேலும் பொதுமக்கள், அந்தந்த காவல் நிலையங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள, 'வாட்ஸ்ஆப்' எண்ணுக்கு பெயர், முகவரி, செல்போன் எண், வெளியூர் செல்லும் நாள், திரும்பி வரும் நாள் உள்ளிட்ட விபரங்களை, அனுப்ப வேண்டும்.
அவ்வாறு, தகவல் அனுப்பும் வீடுகள், காவல் துறையினரின் நேரடி கண்காணிப்பின் கீழ் கொண்டு வரப்படும். இதன் மூலம், திருட்டு போன்ற குற்றங்கள் நிகழாமல் பாதுகாத்துக் கொள்ளலாம். இந்த வாட்ஸ்ஆப் எண்ணுக்கு, சட்டம் ஒழுங்கு சார்ந்த மற்ற புகார்களையும், பொதுமக்கள் அனுப்பலாம் என பேரூர் சரக துணை கண்காணிப்பாளர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு போக்குவரத்துக் கழகம் - ஓராண்டுப் பயிற்சி பணிக்கான அறிவிப்பு வெளியீடு