நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நெருங்கிவரும் நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பரப்புரை காணொலி ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பொதுமக்கள் அனைவரும் தவறாமல் இரட்டை இலைக்கு வாக்களிக்க வேண்டும்.
தற்பொழுது கோவை மாவட்டம் அசாதாரண சூழ்நிலையில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலைச் சந்திக்கிறது. இதுவரை காணாத அளவிற்கு வெளியாட்கள் கோவை மாவட்டத்தில் தங்கவைக்கப்பட்டு பல்வேறு தேர்தல் விதிமுறை மீறல்களிலும், சட்டவிரோதச் செயல்களிலும் ஈடுபட்டுவருகிறார்கள்.
கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு காவல் துறை என்றாலே மிகவும் மோசமான சொற்களால் பொதுமக்கள் அடையாளப்படுத்தி அழைத்துவந்த நிலையை, கடந்த அதிமுக ஆட்சியில் முழுமையாக மாற்றி காவல் துறை என்றாலே பொதுமக்களின் நண்பன் என்ற உன்னத நிலைக்கு கொண்டுசேர்த்தது அதிமுக அரசு.
தேர்தல் ஆணையம் நேர்மையுடன் செயல்படுகிறதா
இன்று குற்றவாளிகளைத் தண்டிக்கும் பணிகளில் ஈடுபட வேண்டிய காவல் துறையே குற்றவாளிகள் குறித்தும், சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடுபவர்கள் குறித்தும் தகவல் கொடுப்பவர்களைத் தேடிச்சென்று வழக்குப் போடுவதும் கைதுசெய்வது போன்ற அவலநிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.
இத்தகைய போக்கு ஜனநாயக நாட்டில், நாட்டின் வளர்ச்சிக்கும், மக்களின் பாதுகாப்பிற்கும் மிகப்பெரிய அச்சுறுத்தலாகவும், பாதுகாப்பின்மை சூழலையும் ஏற்படுத்தியுள்ளது. நேர்மையுடன் செயல்பட வேண்டிய தேர்தல் ஆணையம் அப்படி நடந்துகொள்கிறதா என்ற ஒரு சந்தேகம் பொதுமக்களிடையே ஏற்பட்டு உள்ளது.
அதற்கான காரணம் இதுவரை கோவை மாவட்டத்தில் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக கொண்டுசென்ற கொலுசு, ஹாட்பாக்ஸ் உள்பட எத்தனை லட்சம் மதிப்புடைய பொருள்கள் கைப்பற்றபட்டுள்ளது என்றோ மேலும் முறைகேட்டில் ஈடுபட்ட எத்தனை பேர் கைதுசெய்யப்பட்டார்கள் என்றோ எந்தத் தகவலும் யாருக்கும் தெரியாததுதான்.
இதனால் தற்பொழுது நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நியாயமாக நடைபெறுவதற்கு மத்திய துணை ராணுவப் படையினரை வைத்து இந்தத் தேர்தலைப் பாதுகாப்புடன் நடத்தப்பட வேண்டும்.
மக்களின் பாதுகாப்பையும், நாட்டின் இறையாண்மையையும் காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது எனது பணிவான வேண்டுகோள் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதையும் படிங்க: முன்னாள் எம்பி சசிகலா புஷ்பாவுக்கு முன் ஜாமீன்