கோவை: கோயம்புத்தூர் மாவட்டத்தில் உக்கடம் பகுதியில் தனியார் பள்ளியில் 12ஆம் வகுப்பு பயின்றுவந்த மாணவி ஆசிரியரின் தொடர் பாலியல் தொல்லையால் (நவம்பர் 11) தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். இதைக் கண்ட பெற்றோர் அதிர்ச்சியடைந்து காவல் துறையினரிடம் புகார் அளித்தனர்.
ஆசிரியரின் தொடர் பாலியல் தொல்லை
அதில், பள்ளியின் இயற்பியல் ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி என்பவரின் பாலியல் துன்புறுத்தலே தங்களது மகளின் தற்கொலைக்கு காரணம் என மாணவியின் பெற்றோர் குறிப்பிட்டிருந்தனர். இத்துடன் மாணவி தற்கொலை செய்வதற்கு முன்பு எழுதிவைத்த கடிதத்தில் மூவரின் பெயர்களைக் குறிப்பிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
நடவடிக்கை எடுக்காத பள்ளி நிர்வாகம்
பின்னர், முதல்கட்ட விசாரணையில் மாணவி மிதுன் சக்கரவர்த்தியால் தொடர்ந்து பாலியல் தொல்லைக்கு உள்ளானதாகவும் பள்ளி நிர்வாகத்திடம் இதனைப் பற்றி புகார் தெரிவித்தும்கூட அவர்கள் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்துகொண்டார் எனவும் தெரியவந்துள்ளது.
தற்கொலைக்குத் தூண்டுதல்
இதனையடுத்து (நவம்பர் 12) மாலை மிதுன் சக்கரவர்த்தி மீது தற்கொலைக்குத் தூண்டுதல், போக்சோ சட்டத்தில் இரண்டு பிரிவுகள் என மொத்தம் மூன்று பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிந்து பின்னர் சிறையில் அடைத்தனர்.
இந்த விவகாரத்தில் தலைமறைவாக இருந்த தனியார் பள்ளியின் முதல்வர் மீரா ஜாக்சன் மீது போக்சோ சட்டப்பிரிவின்கீழ் வழக்குப்பதிந்து நிலையில், தனிப்படை காவல் துறையினர் பெங்களூருவில் வைத்து நேற்று (நவம்பர் 14) அவரைக் கைதுசெய்தனர்.
இச்சூழலில், உயிரிழந்த மாணவியின் உடலை அவரது பெற்றோர் உடற்கூராய்வு நிறைவடைந்த பின் நேற்று பெற்றுக்கொண்டனர்.
ஒரு துண்டுச்சீட்டு
இதனையடுத்து நேற்று மீரா ஜாக்சன் ஆர்.எஸ். புரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திலிருந்து நீதிபதி இல்லத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். அதனைத் தொடர்ந்து செய்தியாளரைச் சந்தித்த கோவை வடக்குச் சரக துணை ஆணையர் ஜெயச்சந்திரன், "இந்த வழக்கில் பள்ளியின் ஆசிரியர் கைதுசெய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். விசாரணையில் இது குறித்த ஒரு துண்டுச்சீட்டை கிடைத்துள்ளது.
சிலரின் பெயர்கள்
அதில், சிலரது பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. இதில் வேறு யாரேனும் சம்பந்தப்பட்டு இருக்கிறார்களா என்ற விசாரணையானது நடைபெற்றுவருகிறது. மேலும், இந்தச் சம்பவம் குறித்துத் தெரிந்தும் காவல் துறைக்குத் தகவல் அளிக்காத காரணத்தினால் அப்பள்ளியின் முதல்வரும் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டு நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டுள்ளார். இது குறித்துத் தொடர் விசாரணையானது மேற்கொள்ளப்பட்டுவருகிறது" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க : மாணவியின் இறுதி ஊர்வலம் - கண்ணீர்விட்ட கோவை மக்கள்