பெசன்ட் நகர் கடற்கரைக்குச் செல்லும் நமக்கு, அங்கு கிடக்கும் சூடான சுண்டல், அப்பளம், மீன், பஜ்ஜி, பானி பூரி போன்றவை கூடுதல் உற்சாகத்தைக் கொடுக்கும். அதே போல் குழந்தைகளும் குதூகலமடைய பலூன் சுடுதல், ராட்டினம், குதிரை சவாரி போன்றவையும் நிறைந்திருக்கும். இவை அனைத்தையும் நமக்கு வழங்கிய வியாபாரிகள் தற்போது ஊரடங்கு உத்தரவால் அதிகம் பாதிப்படைந்துள்ளனர். வியாபாரம் இல்லாமல் வருமானம் இன்றி அன்றாட வாழ்வில் பல இன்னல்களை சந்தித்து வருகின்றனர்.
இந்நிலையில் பாதிப்புக்குள்ளான பெசன்ட் நகர் கடற்கரை வியாபாரிகளுக்கு, திருவான்மியூர் இளைஞர்கள் சிலர் உதவிக்கரம் நீட்டி வருகின்றனர். வருமானமில்லாமல் இருக்கும் பெசன்ட் நகர் கடற்கரை வியாபாரிகள் மொத்தம் எத்தனை பேர் உள்ளனர் என்பதைக் கண்டறிந்து, அவர்களின் வங்கிக் கணக்கிற்கு முதல் கட்டமாக ஆயிரம் ரூபாயை செலுத்தி உதவியுள்ளனர். அதேபோல் அங்குள்ள வெளி மாநிலத் தொழிலாளர்களுக்கும் தேவையான உதவிகளை செய்து வருகின்றனர். இவை அனைத்தையும் இளைஞர்கள் வீட்டில் இருந்த படியே ஆன்லைன் மூலம் செய்து வருகின்றனர் என்பது கூடுதல் சிறப்பு.
ஊரடங்கு நடைமுறைக்கு வந்தவுடன் இந்த இளைஞர்கள் முதலில் உதவி செய்தது, களத்தில் உள்ள காவலர்களுக்குத்தான். கடும் வெயிலென்றும் பாராமல் மக்கள் பாதுகாப்புக்காக பணியில் இருக்கும் அவர்களுக்குத் தேவையான முகக்கவசம், தண்ணீர் பாக்கெட் உள்ளிட்டவைகளை வழங்கியுள்ளனர். மேலும் இவர்கள் திருவான்மியூரில் வசிப்பதால் திருவான்மியூர் கடற்கரை வியாபாரிகளுடன் நல்ல தொடர்பில் இருந்துள்ளனர்.
எனவே, அவர்களின் நிலை குறித்து அறிந்து அதிர்ந்த இளைஞர்கள், அவர்களுக்கு உதவும் நோக்கில் தெரிந்தவர்களிடம் நன்கொடை பெற்று உதவி வருகின்றனர். இவ்வளவு நாள் பழகிய ஒருவர் வருமானமின்றி உணவு உள்ளிட்ட தேவைகளுக்காக அல்லல் படுவதைப் பார்க்க முடியவில்லை என்று கூறும் இளைஞர்களான அசோக், சோமு மற்றும் தென்றல் ஆகியோர் இந்த முன்னெடுப்பை தொடங்கியதாகக் கூறுகிறார்கள். மேலும், தொடர்ந்து அவர்களுக்கு உதவ சக நண்பர்களுடன் ஆலோசனை செய்து வருவதாகவும் அசோக் தெரிவித்தார்.
இங்குள்ளவர்களுக்குத்தான் இந்த நிலை என்றால், தமிழகம் வந்து இடம், மொழி புரியாத வட மாநிலத்தவர்கள் பலர் இந்த ஊரடங்கால் படும் அவதி சொல்லில் அடங்காது. அப்படி, கடற்கரைப் பகுதியில் பானி பூரி விற்று வந்த வட மாநில இளைஞர் ஒருவருக்கு அம்மா உணவகத்தில் இலவச உணவு இருப்பது கூட தெரியாமல், உணவின்றி தவித்து வந்துள்ளார். அதையறிந்த திருவான்மியூர் இளைஞர்கள், அவருக்கு வேண்டிய உதவியை செய்ததுடன், அவரைப் போன்றோரைக் கண்டறிந்தும் உதவி புரிந்து வருகிறார்கள். கரோனாவின் கொடும் தாக்கத்தால் மனதளவில் ஏற்பட்டுள்ள ரணம், இம்மாதிரியான நல்லுள்ளங்களின் செயல்களால்தான் சற்று ஆறுதலடைகிறது.
இதையும் படிங்க: சொந்த ஊர் செல்ல அனுமதி வேண்டி திரண்ட வெளி மாநிலத்தவர்கள்!