சென்னை தலைமை செயலகத்தில் நேற்று (ஏப்ரல்.28) நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தில் ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து நேரம் இல்லா நேரத்தில் கவன ஈர்ப்பு தீர்மானத்தை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கொண்டு வந்தார்.
இதற்கு பதிலளித்துப் பேசிய மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், "தீ விபத்து நடந்த இடத்திற்கு உடனடியாக 4 தீயணைப்பு வண்டிகள் விரைந்து சென்று தீயணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
தானும், சுகாதார துறை செயலாளரும், ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்து கட்டுக்குள் கொணரும் நடவடிக்கைகளை நேரில் ஆய்வு செய்தோம். தீயணைக்கும் இடத்திலிருந்து நோயாளிகள் மற்றும் பல்வேறு நபர்கள் மீட்கப்பட்டனர். மேலும் மீட்கப்பட்ட நபர்களிடம் அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் நலம் விசாரித்துச் சென்றனர். எந்த ஒரு உயிர் சேதமும் இன்றி நேற்று மீட்புப் பணிகள் நடைபெற்றது" என்றார்.
அரசு எடுத்த அதிதீவிர நடவடிக்கையால் ஒரு உயிர் கூட போகவில்லை. உண்மையில் இதுவே வேறு ஆட்சியாக, வேறு முதலமைச்சராக இருந்திருந்தால் 128 பேர் பலியாகி இருப்பார்கள். முதலமைச்சர் ஸ்டாலின் எடுத்த வேகமான நடவடிக்கையில் 128 உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன என்றார். டவர் ஒன்று, டவர் 2 எல்லாம் எங்கள் ஆட்சியில் கட்டியது என்று எதிர்க்கட்சித் தலைவர் கூறுகிறார். எதிர்க்கட்சித் தலைவர் உண்மை நிலை தெரிந்து பேச வேண்டும்.
ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையை திமுக ஆட்சியில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி கட்டினார். அதிமுக ஆட்சி காலத்தில் அதற்கு சுண்ணாம்பு அடித்து திறந்து வைத்தீர்கள். மேலும் திமுக ஆட்சி காலத்தில் தான் ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை என்று பெயர் வைக்கப்பட்டது. கடந்த அதிமுக 10 ஆண்டுக்கால ஆட்சிக்காலத்தில், ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சரியான பராமரிப்பு இல்லாத காரணத்தால் மிகவும் பழமையான கட்டிடத்தில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
மேலும், முதலமைச்சர் அந்த கட்டிடதை உடனடியாக ஆய்வு செய்து பயன்படுத்த தகுதி அற்றது என்றால் புதிய கட்டிடம் கட்ட மானியக் கோரிக்கை அறிவிப்பு வெளியிட வேண்டும் என்று தெரிவித்திருந்தார். முதலமைச்சரின் உத்தரவுக்கு இணங்க, சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் புதிதாக 65 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய கட்டிடம் கட்டப்படும்" என்று தெரிவித்தார்.