சென்னை: தலைநகர் சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில், மேகதாது அணை குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. இதில் 13 கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
கூட்டத்தில் பேசிய மு.க. ஸ்டாலின், "மேகதாது அணை கட்டும் முயற்சிகளைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை நாம் அனைவரும் இணைந்து மேற்கொண்டு, கீழ்க்கண்ட தீர்மானங்களை இக்கூட்டத்திலேயே ஒருமனதாக நிறைவேற்றிட வேண்டும் என்றும், இந்தத் தீர்மானங்களை அனைத்துக் கட்சிக் குழுவாகச் சென்று ஒன்றிய ஜல்சக்தித் (நீராற்றல்) துறை அமைச்சரிடம் அளித்திட வேண்டும் என்றும் கோருகிறேன்.
காவிரியே தமிழ்நாட்டின் வாழ்வுரிமை
காவிரிப் பிரச்சினை என்பது அரசியல் பிரச்சினை அல்ல; தமிழ்நாட்டு மக்களின் வாழ்வுரிமைப் பிரச்சினை; விவசாய மக்களின் வாழ்க்கைப் பிரச்சினை. அதில் அரசியல் நோக்கங்களைத் தவிர்த்து அனைவரும் ஒருங்கிணைந்த முடிவெடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
வாழ்வாதாரப் பிரச்சினையில் தமிழ்நாடு ஒரே சிந்தனையில் நின்றது என்பதை நாம் காட்டியாக வேண்டும். அந்த அடிப்படையில் உங்களது (எதிர்க்கட்சிகள்) ஆலோசனைகள் அமையட்டும்.
ஸ்டாலினின் உறுதியும், நம்பிக்கையும்
மேகதாது அணையை எந்தச் சூழலிலும் அனுமதிக்க மாட்டோம். அதில் தமிழ்நாடு அரசு உறுதியாக இருக்கிறது. அந்த உறுதிக்கு உங்கள் அனைவரது ஒத்துழைப்பும் நிச்சயம் இருக்கும் என்று நம்புகிறேன்" எனத் தெரிவித்தார்.
பின்னர், கூட்டத்தில் கலந்துகொண்ட சட்டப்பேரவைக் கட்சித் தலைவர்கள், கர்நாடக அரசு மேகதாது அணையைக் கட்டுவதற்கு மேற்கொள்ளும் முயற்சிகளைத் தடுக்கும் வகையில் தமிழ்நாடு அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு நல்குவதாகத் தெரிவித்து, அரசுக்கு ஆலோசனைகளை வழங்கினார்கள்.
இதையும் படிங்க: 'மேகேதாட்டு... கர்நாடக அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுக்க வேண்டும்'