சென்னை: கிண்டி கிங்ஸ் இன்ஸ்டிடியூட் வளாகத்தில் உள்ள அரசு கரோனா சிறப்பு மருத்துவமனையில் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆய்வுமேற்கொண்டார்.
கரோனா சிறப்பு அறைக்குள் பாதுகாப்பு உடையை அணிந்துகொண்டு சென்ற அமைச்சர் விஜயபாஸ்கர் சிகிச்சைப் பெற்றுவருபவர்களிடம் மருத்துவம், வசதிகள் குறித்து கேட்டறிந்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விஜயபாஸ்கர், "கிண்டி அரசு கரோனா மருத்துவமனையில் 750 படுக்கை வசதிகளுடன் தரமான சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. நோயாளிகளுக்குத் தேவையான சிகிச்சை வசதிகள் சிறப்பாகச் செய்யப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைவோர் விகிதம் 90 விழுக்காடாக இருந்துவருகிறது.
மேலும், கரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை 10 விழுக்காடாகக் குறைக்கப்பட்டுள்ளது. இங்கு கரோனா தொற்று பாதிப்பு குறைந்துவருவதற்கு முழுக்க முழுக்க பொதுமக்களின் ஒத்துழைப்பே காரணம்.
இங்கிலாந்திலிருந்து கொண்டுவரப்பட்டுள்ள கோவிஷீல்ட் தடுப்பூசி ஒரு வாரத்திற்கு முன்னர் இருந்தே ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் போடப்பட்டுவருகிறது. அதனால் எந்த ஒரு பக்கவிளைவும் இதுவரை இல்லை எனத் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் தெரிவித்துள்ளனர்” என்று கூறினார்.