சென்னை: விசாரணைக் கைதி விக்னேஷ் உயிரிழந்த சம்பவத்தில் ஏற்கெனவே இரண்டு போலீசார் கைது செய்யப்பட்ட நிலையில், உயிரிழப்பு நடந்த தலைமை செயலக காலனி காவல் நிலையத்தில் அன்றைய தினம் பணியில் இருந்த அனைவரிடமும் சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டனர் .
இதில் காவல் நிலைய எழுத்தர் முனாப், சிறப்பு உதவி ஆய்வாளர் குமார், ஆயுதப்படை காவலர்கள் சந்திரகுமார் மற்றும் ஜெகஜீவன் ஆகியோரும் விக்னேஷை தாக்கியது தெரியவந்துள்ளதால் சிபிசிஐடி போலீசார் அவர்கள் மீது எஸ்சி,எஸ்டி வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைதுசெய்தனர்.
கைது செய்யப்பட்ட ஆறு போலீசாரையும் சைதாப்பேட்டை மேஜிஸ்ட்ரேட் முன்பு ஆஜர்படுத்தினர், இதையடுத்து ஆறு பேரையும் வரும் 20ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க நீதித்துறை நடுவர் உத்தரவிட்டார். தொடர்ந்து ஆறு பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
முன்னதாக பணியிடை நீக்கம் செய்யப்பட்ட உதவி ஆய்வாளர் புகழும் பெருமாள், எவ்வித குற்றமும் புரியாதது விசாரணையில் உறுதியானதால் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.